வித்தியா கொலை: ஜின் டெக், தகவல் ஊடக தொழில்நுட்ப மைய அதிகாரிகளுக்கு அழைப்பாணை 

வித்தியா கொலை: ஜின் டெக், தகவல் ஊடக தொழில்நுட்ப மைய அதிகாரிகளுக்கு அழைப்பாணை 

எழுத்தாளர் Bella Dalima

20 Apr, 2016 | 8:35 pm

யாழ். புங்குடுதீவில் கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்திக் கொலை செய்யப்பட்ட மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் வழக்கு விசாரணை தொடர்பில் ஜின் டெக் நிறுவனத்தின் தலைமை ஆய்வாளருக்கும், தகவல் ஊடக தொழில்நுட்ப மையத்தின் பிரதம பொறியியலாளருக்கும் ஊர்காவற்துறை நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம். ரியாலினால் இந்த அழைப்பாணை இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மரபணு ஆய்வு அறிக்கையை சமர்ப்பிப்பதில் உள்ள தாமதம் குறித்து மே மாதம் 5 ஆம் திகதி தலைமை ஆய்வாளர் மன்றுக்கு அறிவிக்க வேண்டும் எனவும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள தகவல் ஊடக தொழில்நுட்ப மையத்தின் பிரதம பொறியியலாளருக்கும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் இன்று அழைப்பானை விடுத்தது.

வித்தியாவின் கையடக்கத் தொலைபேசிப் பரிசோதனை முடிவுகள் இதுவரை கிடைக்கவில்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் இன்று அறிவித்ததை அடுத்து இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்றைய வழக்கு விசாரணையின் போது சம்பவத்துடன் தொடர்புடைய 11 ஆம் மற்றும் 12 ஆம் சந்தேகநபர்கள் நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

கொலை தொடர்பில் புதிய தகவல்கள் 12 ஆம் சந்தேகநபருக்குத் தெரியும் எனவும் அவர் வாக்குமூலம் வழங்கத் தயாராகவுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.

எனினும், இன்றைய வழக்கின் போது 12 ஆம் சந்தேகநபர் தனக்கு எவ்வித புதிய தகவல்களும் தெரியாது என கூறி வாக்குமூலம் வழங்க மறுத்துள்ளார்.

இதேவேளை, இரண்டாம் மற்றும் மூன்றாம் சந்தேகநபர்களின் வாக்குமூலத்தின் பிரகாரம் மாணவி வித்தியாவைக் கண்காணிக்கும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.

மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை தொடர்பான அனைத்து ஆவணங்களும் எதிர்வரும் 25 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்