விடுதலை செய்ய வேண்டாம் என கோரிக்கை: பிள்ளையானின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

விடுதலை செய்ய வேண்டாம் என கோரிக்கை: பிள்ளையானின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

விடுதலை செய்ய வேண்டாம் என கோரிக்கை: பிள்ளையானின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

எழுத்தாளர் Bella Dalima

20 Apr, 2016 | 7:02 pm

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் மட்டக்களப்பு மாவட்ட நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டது.

அதற்கமைய, சந்தேகநபர்கள் நான்கு பேரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்படவுள்ளதால் இவர்களை விடுதலை செய்ய வேண்டாம் என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை பரீசீலனை செய்த நீதவான் சந்தேகநபர்களுக்கான விளக்கமறியல் நீடிப்பு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையானின் பிணை மனு கோரிக்கை கடந்த வழக்கு விசாரணையின் போது மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கம் 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி மட்டக்களப்பில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் பிள்ளையானுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம். கலீல் ஆகியோர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்