சொகுசுப் பொருட்களுக்கே வரி: உத்தேச வரித்திருத்தம் தொடர்பில் கருத்து

சொகுசுப் பொருட்களுக்கே வரி: உத்தேச வரித்திருத்தம் தொடர்பில் கருத்து

எழுத்தாளர் Bella Dalima

20 Apr, 2016 | 10:01 pm

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பின் போது உத்தேச வரித்திருத்தம் தொடர்பில் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

இதன்போது, ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட விடயங்களுக்காக இந்த வரி அறவிடப்பட மாட்டாது எனவும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக விடுவிக்கப்பட்ட எந்தவொரு பொருள் மீதும் வெட் வரி விதிக்கப்பட மாட்டாது எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருட்கள் மீது வெட் வரியைச் செலுத்தி மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாது சொகுசுப் பொருட்களுக்கே வரி அறவிடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, தனியார் வைத்தியசாலைகளுக்கு வெட் வரி விதிக்கப்படும் எனவும் நோயாளர் பரிசோதனைக்காக அறவிடப்படும் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சரவை இணைப்பேச்சாளர், அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

மேலும், தனியார் வைத்தியசாலைகளில் வெட் வரி ஊடாக அறவிடப்படும் பணம், அரச வைத்தியசாலைகள் மற்றும் அரச சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தப்படவுள்ளதாகவும் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.

அத்துடன், சர்வதேச தனியார் பாடசாலைகளில் அறவிடப்படும் பணம் கல்வி அமைச்சுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அப்பணம் முழுமையாக அரச கல்வித்துறையை மேம்படுத்தப் பயன்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்