கிராம உத்தியோகத்தர் கொலை: மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம்

கிராம உத்தியோகத்தர் கொலை: மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம்

எழுத்தாளர் Bella Dalima

20 Apr, 2016 | 10:17 pm

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி, சிவபுரம் பகுதியில் கிராம உத்தியோகத்தர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து இன்று கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

களுவாஞ்சிக்குடி, சிவபுரம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் மற்றுமொருவருடன் சென்றுகொண்டிருந்த கிராம உத்தியோகத்தர் தாக்கிக் கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலைச் சம்பவத்தைக் கண்டித்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் உள்ளிட்ட மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராசா உள்ளிட்ட உத்தியோகத்தர்களும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை, கிராம உத்தியோகத்தரின் கொலையைக் கண்டித்தும் நீதியான விசாரணையை வலியுறுத்தியும் களுவாஞ்சிக்குடியில் இன்று கண்டனப்பேரணி முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய கிராம சேவகர்கள் சங்கத்தினால் இந்த கண்டனப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மண்முனை தென் உருவில்பற்று பிரதேச செயலகத்தில் இருந்து ஆரம்பமான, பேரணி பிரதான வீதி வழியாக களுவாஞ்சிக்குடி சந்தி வரை சென்று மீண்டும் பிரதேச செயலகத்தில் நிறைவுபெற்றது.

பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கறுப்புப் பட்டிகளை அணிந்து பேரணியில் கலந்துகொண்டிருந்தனர்.

கிராம உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் பேரணியில் கலந்துகொண்டிருந்தனர்.

சிவபுரம் பகுதியிலிருந்து மோட்டர் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது பின்தொடர்ந்து வந்த இருவரால் குறித்த கிராம உத்தியோகத்தர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தாக்கப்பட்டார்.

இந்தத் தாக்குதலில் காயமடைந்த கிராம உத்தியோகத்தர் உயிரிழந்ததுடன் அவருடன் பயணித்த மற்றையவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவத்தை நேரில் கண்ட சிலரின் சாட்சியத்தின் அடிப்படையில் 22 மற்றும் 24 வயதான சிவபுரம் பகுதியைச் சேர்ந்த இரண்டு உறவுமுறை இளைஞர்களைப் பொலிஸார் கைது செய்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்