இதுவே என் கடைசி உரையாகக்கூட இருக்கலாம்: ஃபிடல் கெஸ்ட்ரோ உணர்ச்சிகர உரை

இதுவே என் கடைசி உரையாகக்கூட இருக்கலாம்: ஃபிடல் கெஸ்ட்ரோ உணர்ச்சிகர உரை

எழுத்தாளர் Bella Dalima

20 Apr, 2016 | 4:21 pm

“இதுவே என் கடைசி உரையாகக்கூட இருக்கலாம். நமது இலத்தீன் அமெரிக்க நண்பர்களுக்கும் பிற நாட்டு நண்பர்களுக்கும் கியூப மக்கள் எப்போதும் வெற்றியாளர்களே என்ற செய்தியைத் தெரிவிக்க வேண்டும்” என ஃபிடல் கெஸ்ட்ரோ தனது உரையில் தெரிவித்துள்ளார்.

கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஃபிடல் கெஸ்ட்ரோவின் சகோதரர் ராவுல் கெஸ்ட்ரோ ஏற்றுக்கொள்வார் என அந்நாடு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பும் அதன் நிமித்தமாக ஃபிடல் கெஸ்ட்ரோ ஆற்றிய உரையும் இந்த உலகுக்கு ஒரு ஆணித்தரமான செய்தியைத் தெரிவித்திருக்கிறது.

“கியூபாவின் மூத்த தலைவர்கள் மறைந்தாலும் கூட அந்நாட்டின் புரட்சிகர சிந்தனை, தலைமுறைகள் கடந்து நிற்கும்” என்பதே அச்செய்தி.

நேற்று (19) செவ்வாய்க்கிழமை கியூப காங்கிரஸ் கூடி கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைமைப் பொறுப்பை 84 வயதான ராவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைப்பது என்ற முடிவை எடுத்தது.

அந்த ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்த பின்னர் கியூப அரச தொலைக்காட்சியில் தோன்றினார் ஃபிடல் கெஸ்ட்ரோ.

தலைநகர் ஹவானாவில் உள்ள பாரம்பரிய அரங்கில் ஃபிடல் கெஸ்ட்ரோ உரையாற்றினார். அவரது உரையைக் கேட்கக் குழுமியிருந்த விருந்தினர்கள் சிலர் கெஸ்ட்ரோவின் உணர்ச்சிகரமான உரையைக் கேட்டு கண்ணீர் சிந்தினர்.

அவர் கூறியதாவது,

[quote]நான் விரைவில் 90 வயதைத் தொட்டு விடுவேன். அதன் பின்னர் நானும் மற்ற வயோதிகர்களைப் போலவே இருப்பேன். காலம் என்னை மறையச் செய்யும். ஆனால், கியூபாவின் கம்யூனிஸ்ட்டுகள் இந்த புவியில் ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்வர்.

கம்யூனிஸ சித்தாந்தத்தை உத்வேகத்துடன் அதற்குண்டான உரிய மரியாதையுடன் பின்பற்றினால் மனித குலத்திற்கு ஆகச் சிறந்த பொருளாதார, கலாசார நன்மைகளைச் செய்ய முடியும் என்பதை உணர்த்தலாம். நமது கோட்பாடுகளை நிலைநிறுத்த சமரசமின்றிப் போராட வேண்டும்.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்