வட்டுவாகலில் சரணடைந்தவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு ஒத்திவைப்பு

வட்டுவாகலில் சரணடைந்தவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு ஒத்திவைப்பு

எழுத்தாளர் Bella Dalima

19 Apr, 2016 | 8:27 pm

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது முல்லைத்தீவு, வட்டுவாகலில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் சார்பில் ஆஜராகும் அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் ஆஜராகாதமையால் வழக்கு விசாரணையை மே மாதம் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து முல்லைத்தீவு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது முல்லைத்தீவு, வட்டுவாகலில் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகக் கூறப்படும் நபர்களின் பதிவுகளை இன்றைய தினம் சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் கடந்த வழக்கு விசாரணையின்போது உத்தரவு பிறப்பித்திருந்தது.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆட்கொணர்வு மனு முல்லைத்தீவு நீதவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் கடந்த பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு, வட்டுவாகல் பகுதியில் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட தங்களின் உறவினர்களைக் காணவில்லை என காணாமற்போனோரது உறவினர்கள் 2013 ஆம் ஆண்டு வவுனியா நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணைகள் பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன.

இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் பதிவுகள் இருப்பின் அவற்றை இன்றைய தினம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு இராணுவம் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்