சர்வதேச நாணய நிதியத்திடம் எதிர்பார்த்துள்ள பணம் இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கும் – ஹர்ஷ

சர்வதேச நாணய நிதியத்திடம் எதிர்பார்த்துள்ள பணம் இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கும் – ஹர்ஷ

எழுத்தாளர் Bella Dalima

19 Apr, 2016 | 9:46 pm

சர்வதேச நாணய நிதியத்திடம் எதிர்பார்த்துள்ள பணம் இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இது குறித்துக் கலந்துரையாட நிதி அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் வொஷிங்டன் சென்றுள்ளனர்.

கடந்த 10 ஆம் திகதி ஆரம்பமான சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் மாநாடு நேற்று வரை வொஷிங்டனில் நடைபெற்றது.

இந்த மாநாட்டுக்கு முன்னர் டொட் ஷனைய்டரின் தலைமையில் சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது.

மார்ச் 31 ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் 11 ஆம் திகதி வரை அவர்கள் இலங்கை விஜயத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பொருளாதார அபிவிருத்தி, அரச நிதி மற்றும் அந்நிய செலாவணி ஆகியவற்றை சிறந்த மட்டத்தில் பேணும் நோக்கில் இலங்கை அதிகாரிகள் பொருளாதார செயற்றிட்டங்களை சிபாரிசு செய்துள்ளதாக விஜயத்தின் பின்னர் அவர்கள் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வரி நிர்வாகம், வரிக்கொள்கை மேம்பாடு, அரச நிதி முகாமைத்துவம், அரச நிறுவன மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் அதில் உள்வாங்கப்பட்டிருந்தன.

அந்த கொள்கை வகுப்பின் ஊடாக 2016 ஆம் ஆண்டின் அரச கடன் மொத்த தேசிய உற்பத்தியினை 5.4 வீதமாகக் குறைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளமையை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் வரவேற்றிருந்தனர்.

இதேவேளை, அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட வரி மற்றும் செலவுகள் தொடர்பிலான கொள்கை வகுப்பினை மிக விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கு தாம் ஆலோசனை வழங்குவதாகவும் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த விடயங்களை அடிப்படையாக வைத்து கடன் சலுகையின் கீழ் 36 மாத கால பொருளாதாரத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடல் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்