கச்சத்தீவை மீட்பதாக இரண்டு திராவிடக் கட்சிகளும் நாடகம் நடத்துவதாக ராமதாஸ் குற்றச்சாட்டு

கச்சத்தீவை மீட்பதாக இரண்டு திராவிடக் கட்சிகளும் நாடகம் நடத்துவதாக ராமதாஸ் குற்றச்சாட்டு

எழுத்தாளர் Bella Dalima

19 Apr, 2016 | 8:59 pm

கச்சத்தீவை மீட்பதாக இரண்டு திராவிடக் கட்சிகளும் நாடகம் நடத்துவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டமை தொடர்பில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர், தமிழக முதல்வர், ஜெயலலிதா ஜெயராம் திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சித்திருந்தார்.

தமிழக முதல்வர் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறிவருவதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி அறிவித்திருந்த நிலையிலேயே பாட்டாளி மக்கள் கட்சி இதனை குறிப்பிட்டுள்ளது.

கச்சத்தீவு விடயத்தில் இரண்டு திராவிடக் கட்சிகளும் நாடகம் நடத்துவதை மக்கள் அறிவார்கள் எனவும் அவர்களை இனியும் ஏமாற்ற முடியாது எனவும் டொக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழகத்திற்கு சொந்தமாக இருந்த கச்சத்தீவை தாரை வார்த்தது யார், என்ற விடயத்தில் குற்றவாளிகளே தீர்ப்பளித்தால் எவ்வாறு இருக்குமோ அதேபோன்று இரு கட்சிகளும் முன்வைக்கும் வாதங்கள் மிகவும் அபத்தமாக உள்ளதென அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கச்சத்தீவு தொடர்பில் தமிழக முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் மு.க.ஸ்டாலினும் கூறியுள்ள கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்துள்ளது.

கச்சத்தீவு பிரச்சினையில் இந்த இரண்டு கட்சிகளும் துரோகம் செய்துள்ளதாக டொக்டர் ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்