பனாமா ஆவணங்கள்: வருமானவரி அதிகாரிகள் பொதுவான நடவடிக்கையை முன்னெடுக்கத் திட்டம்

பனாமா ஆவணங்கள்: வருமானவரி அதிகாரிகள் பொதுவான நடவடிக்கையை முன்னெடுக்கத் திட்டம்

எழுத்தாளர் Bella Dalima

14 Apr, 2016 | 10:16 pm

சட்டவிரோத நிதிப்பாய்ச்சல் தொடர்பான தகவல்களை பகிரங்கப்படுத்திய பனாமா ஆவணங்கள் குறித்து சர்வதேச ரீதியில் பொதுவான நடவடிக்கையொன்றை எடுப்பதற்கு உலகம் முழுவதும் வருமானவரி அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.

உலக நாடுகள் பலவற்றின் வருமானவரி அதிகாரிகள், நிதியமைச்சுக்களின் நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் வருமானவரி ஆணையாளர்கள் பாரிசில் ஒன்றுகூடியுள்ளனர்.

பனாமா ஆவணங்களின் சட்டவிரோத கொடுக்கல் வாங்கல்களை உலகிற்கு வெளிப்படுத்திய ICIJ எனும் சர்வதேச ஆய்வு ஊடக வலையமைப்பு, இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

மொஸக் பொன்சேக்கா நிதி நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட 210,000 எல்லையற்ற நிறுவனங்கள் தொடர்பான 11.5 மில்லியன் ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பனாமாவிலுள்ள மொஸக் பொன்சேக்கா நிறுவனத்தின் தலைமையகத்தில் சோதனை நடத்தப்பட்டதை அடுத்து, அந்த நிறுவனத்தின் செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பனாமா ஆவணங்கள் மூலம் பகிரங்கப்படுத்தப்பட்ட வலையமைப்பில் இலங்கையின் மூன்று நிறுவனங்களும், 22 முதலீட்டாளர்களும் உள்ளடங்கியுள்ளமை தெரியவந்தது.

அமெரிக்காவின் குளோபல் ஃபைனேன்ஸியல் இன்டர்கிரிட்டி நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட தகவல்களுக்கமைய, கடந்த பத்தாண்டுகளில் இலங்கையிருந்து 2.88 ட்ரில்லியன் ரூபா பணம் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளது.

பனாமா ஆவணங்கள் தொடர்பில் அதிகக் கவனம் செலுத்தி, அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென இலங்கையின் பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்