தனுஷ்கோடியில் கரையொதுங்கிய இலங்கைப் படகால் பரபரப்பு

தனுஷ்கோடியில் கரையொதுங்கிய இலங்கைப் படகால் பரபரப்பு

எழுத்தாளர் Bella Dalima

14 Apr, 2016 | 7:34 pm

தமிழகத்தின் ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிக்கு இலங்கையிலிருந்து சென்றதாகக் கூறப்படும் மர்மப் படகால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மர்மப் படகில் இருந்தவர்கள் குறித்து இந்திய மத்திய மாநில உளவுப் பிரிவு பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக எமது ராமேஸ்வரம் செய்தியாளர் குறிப்பிட்டார்.

தனுஷ்கோடியை அண்மித்துள்ள அரிச்சல்முனை பகுதியில் நேற்றிரவு சந்தேகத்திற்கிடமான இலங்கைப் படகொன்று கரையொதுங்கியுள்ளதாக பிரதேச மீனவர்கள் வழங்கிய தகவலின் பிரகாரம் தமிழக சுங்க அதிகாரிகள் அதனை மீட்டுள்ளனர்.

படகில் வந்தவர்கள் அங்கிருந்து ஏதேனும் பொருட்களை ஏற்றிச்செல்ல அல்லது இறக்கிச் செல்வதற்காக வந்துள்ளனரா எனவும், அல்லது அங்கிருந்து நபர்களை ஏற்றிச்செல்ல அல்லது இறக்கிவிட்டுச் செல்லும் நோக்கில் வந்துள்ளனரா என்ற கோணங்களில் உளவுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பிட்ட படகில் 25 குதிரை வலுகொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டிருந்ததுடன், 30 லிற்றர் மண்ணெண்ணெய் மற்றும் மீன்பிடி வலைகளும் காணப்பட்டதாக தமிழகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

இந்த விடயம் குறித்து கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவியிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.

சம்பவம் குறித்து இதுவரை கடற்படைக்கு தகவல் பதிவாகவில்லை என்றும், அதுகுறித்து ஆராய்ந்து பார்ப்பதாகவும் கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இந்திய அதிகாரிகளால் உத்தியோகபூர்வமாக அறிவித்தல் விடுக்கப்படும் பட்சத்தில் தனுஷ்கோடியில் கரையொதுங்கிய மர்மப் படகு தொடர்பில் கடற்படைத் தரப்பினால் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்