முன்னிலை சோஷலிசக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

முன்னிலை சோஷலிசக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

01 Apr, 2016 | 9:49 pm

முன்னிலை சோஷலிசக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கொழும்பு குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்குள் இன்று பிற்பகல் பிரவேசித்தனர்.

முன்னிலை சோஷலிசக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரான குமார் குணரட்னத்திற்கு பிரஜாவுரிமையை வழங்குமாறு கோரியே அவர்கள் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்குள் பிரவேசித்துள்ளனர்.

குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறியமையினால், முன்னிலை சோஷலிசக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரான குமார் குணரட்னத்திற்கு நேற்று (31) ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கொழும்பு – புஞ்சி பொரளையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன்னால் முன்னிலை சோஷலிசக் கட்சியின் தலைவர்கள் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் இன்று எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இந்த சந்தர்ப்பத்தில் அந்த பகுதியில் பொலிஸார் மற்றும் கலகத்தடுப்புப் பிரிவினர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டதுடன், குடிவரவு குடியகல்வு அலுவலகம் அச்சந்தர்ப்பத்தில் பூட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதனால், பலவந்தமாக குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசித்தனர்.

இந்த சம்பவத்தின் போது சிலருக்கு சிறு காயங்களும் ஏற்பட்டிருந்தன.

இதேவேளை, எதிர்ப்பின் போது தலையில் தாக்கப்பட்டமையினால் தாம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக முன்னிலை சோஷலிசக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் துமிந்த நாகமுவ தெரிவித்தார்.

நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர கூறினார்.

பொலிஸாரின் கட்டளையை மீறி குடிவரவு குடியகல்வு கட்டடத்திற்குள் பிரவேசித்த சந்தர்ப்பத்தில், குறைவான அதிகாரத்தைப் பயன்படுத்தி எதிர்ப்பில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு நடவடிக்கை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தினால் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு 2 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்