முன்னாள் ஜனாதிபதிகள் பகையைத் தீர்க்க கட்சியைப் பயன்படுத்துவதாக டிலான் பெரேரா தெரிவிப்பு 

முன்னாள் ஜனாதிபதிகள் பகையைத் தீர்க்க கட்சியைப் பயன்படுத்துவதாக டிலான் பெரேரா தெரிவிப்பு 

எழுத்தாளர் Bella Dalima

30 Mar, 2016 | 9:11 pm

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஊடகவியலாளர் சந்திப்பொன்றை இன்று ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர், அமைச்சர் டிலான் பெரேரா பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.

[quote]ஹைட் பார்க்கில் இடம்பெற்ற கூட்டத்தின் போது, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எவரும் மைத்திரிபால சிறிசேனவை விமர்சிக்கவில்லை என நாம் தெளிவாகக் கண்டோம். ஐக்கிய தேசியக் கட்சியையே விமர்சிக்க வேண்டும். அரசாங்கத்திற்குள் ஐக்கிய தேசியக் கட்சி சில சந்தர்ப்பங்களில் செயற்படும் விதம் தொடர்பில் விமர்சிக்க வேண்டும். அதனால் ஹைட் பார்க்கிற்கு சென்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கட்சியின் ஒழுக்கத்தைப் பாதுகாத்தனர் என்றே கூற வேண்டும். மஹிந்த அமரவீர, வெல்கம, டிலான், அளுத்கம ஆகியோர் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுப்பேற்கும் காலம் எழுந்துள்ளது. பைசர் முஸ்தபா, சியம்பலாப்பிட்டிய போன்றவர்களுக்கும் இடமுள்ளது. அந்தக் கட்சியே தற்போது உருவாக்கப்பட்டு வருகின்றது. இணக்க அரசாங்கத்திலுள்ளவர்கள் குறைந்தளவு பங்குதாரர்கள் அல்ல, சம பங்குதாரர்களாவர்.[/quote]

கட்சியின் முன்னாள் தலைவர்கள் தொடர்பிலும் டிலான் பெரேரா கருத்துத் தெரிவித்தார்.

[quote]சந்திரிக்கா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஸவுடனான தனிப்பட்ட பகையை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுவிற்குள் தீர்க்க முற்படுகின்ற போதே இந்தப் பிரச்சினை உருவாகுகின்றது. மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஸவை தோல்வியடையச் செய்தமையினால், மைத்திரிபால சிறிசேன மீதான தனிப்பட்ட பகையை அவர் தீர்க்க முற்படுகின்றார். இவர்கள் இருவரும் பகையைத் தீர்ப்பதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பயன்படுத்தாது, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அவர்கள் இருவருக்கும் வழங்கிய விடயங்கள் தொடர்பில் கட்சிக்கு நன்றிக் கடன் செலுத்த வேண்டும்.[/quote]

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையப் போகின்றீர்களா என ஊடகவியலாளர்கள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவாளராக அரசியலில் வெறுப்பு ஏற்பட்டிருந்தால் வீட்டிற்குச் செல்வேனே தவிர ஐக்கிய தேசியக் கட்சிக்கு செல்ல மாட்டேன், என தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்