மறவன்புலவில் தற்கொலை அங்கி, வெடிபொருட்கள் கைப்பற்றல்: சந்தேக நபர் கைது

மறவன்புலவில் தற்கொலை அங்கி, வெடிபொருட்கள் கைப்பற்றல்: சந்தேக நபர் கைது

எழுத்தாளர் Bella Dalima

30 Mar, 2016 | 9:26 pm

யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவின் மறவன்புலவு பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து இன்று காலை தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளன.

வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்ட வீட்டின் உரிமையாளர் இன்று பிற்பகல் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் மறைத்து வைத்திருப்பதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலொன்றுக்கு அமைய, யாழ்ப்பாணம் மறவன்புலவு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று அதிகாலை தேடுதல் மேற்கொள்ளப்பட்ட போது வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தன.

இதன்போது 4 கிளைமோர் குண்டுகளும், 12 கிலோகிராம் எடையுடைய டி.என்.டி. வெடிபொருட்கள் அடங்கிய மூன்று பொதிகளும், 9 மில்லிமீற்றர் ரக 100 ரவைகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், குண்டுகளை வெடிக்க வைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் 2 மின்கலங்களும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் வீட்டில் இருந்து தப்பிச்சென்ற வீட்டின் உரிமையாளர் லொறியொன்றில் ஏறி தப்பிச் செல்கையில் கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலிஸ் காவல் உத்தியோகத்தர்களால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.

30 வயதான இந்த நபர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

யுத்தகாலத்தில் குறித்த பகுதியில் இந்த வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், யுத்த காலத்தில் விட்டுச் செல்லப்பட்ட வெடிபொருட்கள் தற்போது ஆங்காங்கே கைப்பற்றப்பட்டு வருவதாகவும் இதனால் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை எனவும் பாதுகாப்பு செயலாளர்  கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்