மட்டக்களப்பு மகிழூர்முனை கிராம மக்களின் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது

மட்டக்களப்பு மகிழூர்முனை கிராம மக்களின் பிரச்சினை தொடர்பான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2016 | 9:27 pm

மட்டக்களப்பு மகிழூர்முனை கிராமத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்டசெயலகத்தில் இன்று நடைபெற்றது.

நியூஸ்பெர்ஸ்ட் முன்னெடுத்த மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தில் கலந்துகொண்டிருந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜெ.ஸ்ரீறங்கா, மகிழூர்முனை கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விசேட மின்னல் நிகழ்ச்சியொன்றையும் நடத்தியிருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த மக்கள் குடியிருப்பு மற்றும் மின்சார வசதியின்றி எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.

அத்தோடு பிரதேச செயலாளருக்கும் மகிழூர்முனை கிராம மக்களுக்குமிடையில் உரிய முறையில் தொடர்புகள் பேணப்படாமையும் இதன்போது தெரியவந்தது.

சுமார் 2,500 மில்லியன் ரூபா மக்கள் நிதி பயன்படுத்தப்படாத நிலையில் வங்கிக் கணக்குகளில் இருக்கின்றமை குறித்தும் இந்த நிகழ்ச்சியில் தகவல் வெளியானது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ், அரச அதிகாரிகள் , தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் மற்றும் மகிழூர்முனை மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

மின்னல் நிகழ்ச்சியின்போது வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமையவே இன்றைய கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மகிழூர்முனை மக்கள் 50 வருடங்களுக்கு மேலாக முறையான குடியிருப்பு வசதியின்றி வாழ்ந்துவருகின்றமை தொடர்பில் இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது

இதற்கமைய எதிர்காலத்தில் வீட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது மகிழூர்முனை மக்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு இன்றைய கலந்துரையாடலின்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்