வடமாகாண சபையில் 65 ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டத்தை நிராகரிக்கும் பிரேரணை நிறைவேற்றம்

வடமாகாண சபையில் 65 ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டத்தை நிராகரிக்கும் பிரேரணை நிறைவேற்றம்

எழுத்தாளர் Bella Dalima

24 Mar, 2016 | 6:44 pm

யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள 65 ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டத்தை நிராகரிக்கும் பிரேரணை வடமாகாண சபையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

வடமாகாண சபை இன்று அவைத் தலைவர் தலைமையில் கூடியது.

இதன்போது வவுனியாவில் இராணுவக் குடியிருப்பு திறந்து வைக்கப்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

இராணுவக் குடியிருப்பு அமைக்கும் திட்டம் மற்றும் காணி சுவீகரிப்புக்கு வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சபை மத்திக்கு சென்று எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் – கோப்பாய், செல்வபுரம் பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள 65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை ஏற்றுக்கொள்வதில்லை என்ற பிரேரணை இன்று வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது.

இந்திய இழுவைப் படகுகளைத் தடை செய்வது தொடர்பிலும் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பிலும் இன்று வடமாகாண சபையில் கருத்துக்கள் கேட்டறியப்பட்டன.

இதேவேளை, மாகாண சபை அமர்வுகள் நடைபெற்ற சந்தர்ப்பத்தில், பேரவை செயலகத்திற்கு முன்பாக, சுகாதாரத் தொண்டர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.

நிரந்தர நியமனம் வழங்குமாறு பல தடவைகள் விடுவிக்கப்பட்ட கோரிக்கைக்கு இதுவரை தீர்வு கிட்டவில்லை என சுகாதாரத் தொண்டர்கள் தெரிவித்தனர்.

கவனயீர்ப்பில் ஈடுபட்ட சுகாதாரத் தொண்டர்களுடன், வட மாகாண முதலமைச்சர் மற்றும் வட மாகாண சுகாதார அமைச்சர் ஆகியோர் கலந்துரையாடினர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்