“மக்கள் சக்தி இல்லங்கள் தோறும்” – மன்னார் முதல் வவுனியா வரை

“மக்கள் சக்தி இல்லங்கள் தோறும்” – மன்னார் முதல் வவுனியா வரை

“மக்கள் சக்தி இல்லங்கள் தோறும்” – மன்னார் முதல் வவுனியா வரை

எழுத்தாளர் Staff Writer

24 Mar, 2016 | 1:37 pm

செய்தியறிக்கையிடலை தாண்டி மக்களின் இல்லங்களுக்குச் சென்று அவர்தம் குறைகளை கேட்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதே மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தின் குறிக்கோளாகும்.

IMG_0346

எமது செயற்றிட்டம் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் எம்மத்தியில் காணப்பட்டாலும் அதனைத்தாண்டி எமது திட்டத்தின் அடிப்படை நோக்கம் வென்றுவிடக்கூடாது என்றே மன்னார் மற்றும் வவுனியாவுக்கான பயணத்தினை ஆரம்பித்தோம். ஏனெனில் மக்களின் குறைகளை தேடியதே எமது பயணம்.

எனவே குறையின்றிய சமூகங்களையே நாம் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் ஆழ் மனத்தில் வேரூன்றியிருந்தது.

எனினும் எமது வேண்டுதலையும் தாண்டி மனங்களைக் கதற வைத்து சிந்தனை ஓட்டத்தை தூண்டிவிடும் வகையில் தான் நாம் கண்ட காட்சிகளும் மக்கள் கொண்டிருந்த கோலங்களும் அமைந்திருந்தன.

எமக்காக குறிக்கப்பட்டிருந்த இடங்களாக மன்னார் மற்றும் வவுனியா அமைந்தன. மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்டம் மன்னாருக்கான பயணத்தை எதிர்பார்ப்புடன் ஆரம்பித்தது. அழகிய களப்பு மற்றும் கடலால் சூழப்பட்ட பிரதேசம் எனும் பெயர் மன்னார் நகருக்கு காணப்பட்டாலும், சீரான வீதியின்மை, போக்குவரத்து வசதியின்மை, சுத்தமான குடிநீர் கிடைக்காமை, இந்திய மீனவர்களின் அத்துமீறிய பிரவேசம் என பலரும் பார்க்காத வேறொரு முகத்தையும் மன்னார் மாவட்டம் பூண்டிருந்தது.

மனித இனத்துடன் கோவேறு கழுதைகளின் ஐக்கியம் மன்னார் மாவட்டத்திற்கு மாத்திரமே உரித்தான விடயம்.

md-1

அதிக வெப்பத்தை பொருட்படுத்தாது தினம் தோறும் தமது வாழ்க்கைக்கான அடித்தளத்தை தேடும் மக்களின் தேடல் எமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதில் ஐயமில்லை. இந்த இடத்தில் பலரும் அறியாத வரலாற்று சிறப்புமிக்க விடயம் மன்னாருக்கு மேலும் அழகுசேர்ப்பது தொடர்பில் கூறியாக வேண்டும். அதுவேறொன்றுமல்ல பள்ளிமுனையில் காணப்படும் வரலாற்று சிறப்புமிக்க பெருக்க மரம். இதன் சிறப்பு தெற்காசியாவிலே  காணப்படும் மிக அகலமானதும் பழமையானதுமான மரம் என்பதாகும்.

IMG_1307IMG_1309

வாடிய பயிர்களைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளளார். ஆனால் நாம் பயணித்த இடங்களில் மக்களது வாழ்க்கை வாடிக்கிடந்தாலும் அவர்களது மனங்கள் வாடவில்லை. எம்மை இன்முகத்துடனேயே அனைவரும் வரவேற்றனர். விருந்தோம்பலுக்கும் எவ்வித குறையுமில்லை.

அங்கு எமக்கு மக்களது பிரச்சினைகளாக காணக்கிடைத்தவை
1. சீரான வீதியின்மை
2. போக்குவரத்து வசதியின்மை
3. சுத்தமான குடிநீர் கிடைக்காமை
4. இந்திய மீனவர்களின் அத்துமீறிய பிரவேசம்
5. குடிசை போன்ற வீடுகளில் சிறுகுழந்தைகளுடன் வாழும் துர்ப்பாக்கிய நிலை
6. மலசலகூட வசதியின்மை
7. குப்பைக்கூலங்கள் பொது இடங்களில் கொட்டப்படுகின்றமை
8. பாடசாலைகளில் சுத்தமான குடிநீரின்றி அல்லலுறும் மாணவர்கள்
9. ஆசிரியர் பற்றாக்குறை
10. தமது உறவுகளை இழந்து தவிக்கும் சொந்தங்கள்
11. புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள்
ஆகியவை………

எனினும் இவை மாத்திரம் என வரையறை கட்டிவிட முடியாது. ஏனெனில் பல பிரச்சினைகளை எம்மால் வகைப்படுத்த முடியாமல் போனது.

அவற்றில் ஒன்று கடற்றொழிலை வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் பள்ளிமுனை மக்கள் தமது படகுகளை கடற்பரப்பிற்கு கொண்டுசெல்ல அன்றாடம் படும் துன்பம்.

கடற்பகுதிக்கு செல்வதற்கு தினமும் படகை இவர்கள் கைகளால் காவிச்செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலையை நிவர்த்தி செய்து தருமாறி அவர்களது கோரிக்கை அமைந்திருந்தது.

அவர்கள் கேட்டு நிற்பது அந்த கடற்பரப்பினை ஆழப்படுத்தி தாருங்கள் என்பதே. பலராலும் கணக்கிலெடுக்கப்படாத அந்த விடயம் எமது குறைகளுக்கான பெட்டியில் தஞ்சமடைந்தது.

20160304_121147 20160304_121248

20160304_121301 20160304_122800

20160304_124746

கடல்வளத்தையே இல்லாமற் செய்யும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய படையெடுப்பு மன்னார் மாவட்டத்தின் சோகக்கதைகளில் ஒன்று.

அங்குள்ள மீனவர்கள் மீன்கள் அற்றநிலையில் நண்டுகளை விற்பனை செய்து கொண்டு மீன்களுக்காக காத்திருந்த காட்சி எம்மனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆரம்பத்தில் தமது மூதாதையரால் கூறப்பட்ட சில மீனினங்கள் இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன் பிடி நடவடிக்கையினால் அழிவடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

இந்த நிலையின் உண்மைத்தன்மை தொடர்பில் மேலும் ஆராய இராமர் பாலம் நோக்கிய கடற்பயணத்திற்கும் நாம் தயாரானோம். தலைமன்னாரையும் இந்தியாவின் தனுஷ்கோடியையும் இணைக்கும் பகுதியாக இராமர் பாலம் விளங்குகின்றது.

20160305_113500

நாம் நிலங்களிலிருந்து கடலின் மத்தியில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக சுமார் 3 கிலோ மீற்றர் தூரம் படகு மூலம் இராமர் பாலம் அமைந்திருந்த பகுதிக்கு சென்றோம்.

அதோ பரிதாபம் இலங்கை மீனவர்கள் மீன்கள் அற்ற நிலையில் அங்கு காத்திருந்தனர். இவ்வாறான நிலையில் எமது மீனவர்களின் அன்றாட வாழ்க்கை நகர்கின்றது. தலைமன்னாரில் 95 வீதமான மக்களின் ஜீவனோபாய தொழிலாக கடற்றொழில் விளங்குகின்றமை தலைமைகளின் கண்ணிற்கு மட்டும் ஏனோ புலப்படவில்லை.

மேலும்
“அண்ணை நாங்க மன்னார் டவுணுக்கு போறத விட இந்தியாவுக்கு போறது கிட்ட”, இதைக்கேட்டவுடன் இரு விடயங்கள் எமக்கு புலனாகியது.

ஒன்று அதிகரித்த இந்திய மீனவர் பிரவேசத்திற்கான காரணம் மற்றையது மன்னார் நகரப் போக்குவரத்தின் பின்தங்கிய நிலை. நாட்டின் ஒரு பக்கத்தில் அதிவேக வீதிகளில் வாகனங்கள் சீறிட்டுப் பாயும் நிலையில் ஒரு புறத்தில் தமது நாட்டிற்குள் பயணிப்பதை விட அயல்நாட்டிற்கு கடல்வழியாக சென்று வருவது இலகு என கூறும் மக்களும் காணப்படவே செய்கின்றனர்.

மன்னாரிலிருந்து சுமார் 45 -50 கிலோமீற்றர் தூரம் பயணித்து முள்ளிக்குளம் கிராமத்தை அடைந்தோம். அந்த வீதி நாம் மேற்குறிப்பிட்ட விடயத்திற்கு தானும் ஒரு சான்று என பறைசாற்றிக் கொண்டிருந்தது.

நாங்கள் பயணித்த குறித்த வீதியூடாகவே அந்த பிரதேசத்திலுருந்து தெரிவுசெய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளும் அந்த பகுதியில் வாழும் அப்பாவி மக்களின் வாக்குகளை சூறையாடுவதற்கு படையெடுக்கின்றனர். எனினும் சூறையாடல் நிறைவுபெற்றதும் அநத பாதையை மறந்து விடுகின்றனர் என்பதே அப்பிரதேச மக்களின் அங்கலாய்ப்பு.

வீதியின் மோசமான நிலையினால் எமது நேரமும் சூறையாடப்பட்டது என்றே கூறவேண்டும்.

இந்தப்பகுதியில் வாழும் மக்களின் குடியிருப்புக்கள் கொட்டில்களாகவே காணப்படுகின்றது. கால்நடை வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பிற்காக அமைக்கப்படும் கூடாரங்களை போன்ற இடங்களிலே அப்பகுதி மக்கள் வாழ்ந்துவருகின்றனர்.

அங்கு நமது கண்களுக்கு புலப்பட்ட இன்னுமொரு விடயம் யால சரணாலயம் போன்ற இருபுறங்களிலும் காடுகளால் சூழப்பட்ட பகுதியில் காணப்படும் மண் வீதியூடாகவே இங்குள்ள மக்கள், பாடசாலை மாணவர்கள் என அனைவரும் தமது தேவையை பூர்த்தி செய்வற்காக சுமார் 2 அல்லது 3 கிலோ மீற்றர் தூரம் நடந்து சென்றே வவுனியாவிற்கு செல்வதற்கான பஸ் தரிப்பிடத்தை அடையவேண்டிய நிலை காணப்படுகின்றது.

காடுகளுக்கிடையில் வாழும் இந்த மக்கள் பல்வேறு விலங்குகளின் அச்சுறுத்தலை எதிர்நோக்குகின்றனர்.

அடுத்ததாக பல்வேறு கனவுகளுடன் வாழும் மாணவர்கள் கல்வி கற்கும் முள்ளிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு மக்கள் சக்தி குழு பயணமானது.

பாடசாலை கட்டிடங்கள் கம்பீரமாய் தோற்றமளித்தாலும் அந்த மாணவர்களின் கல்வித்தரம் கேள்விக்குள்ளாகியிருந்தது. அந்த பாடசாலைக்கு உயிர்கொடுக்க உரிய ஆசிரியர்கள் இன்மையால் தரம் 5 தொடக்கம் 10 வரை கல்வி கற்கும் மாணவர்களுக்கு 4 பாடங்கள் மாத்திரமே நாளொன்றுக்கு நடைபெறுவதாகவும் மிகுதி 5 பாட நேரத்தினை விளையாட்டில் செலவிடுவதாக மாணவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இக்காலத்து சிறார்கள் எதிர்கால தலைவர்கள் என்ற கூற்று இவ்வாறான பாடசாலைகளுக்கு பொருந்துமா என்ற கேள்வி எம் மனங்களில் கேள்வியாக மாத்திரம் அமர்ந்துவிடாது விடையையும் தேட விளைந்தது.

20160306_114211

அங்கு எமக்கு மேலுமொரு அதிர்ச்சி காத்துக்கிடந்தது. அது மாணவர்களின் நீர்த்தாகத்தை தீர்க்க கட்டப்பட்டிருந்த கிணறு, ஆனால் நமக்கு குப்பை கொட்டப்படும் இடமோ எனும் சந்தேகத்தை உண்டாக்கியது.

ஆனால் “அண்ணா இந்த தண்ணீரையே நாம் குடிநீருக்காக பயன்படுத்துகின்றோம்” என்ற ஏக்க குரலொன்று அந்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவனிடமிருந்து ஒலித்தது.

IMG_1596 IMG_1592

ஒரு கணம் ஸ்தம்பித்துப்போனோம். கவனிப்பாரற்ற நிலையில் வாழும் இப்பகுதி மக்களின் இவ்வாறான நிலைக்கு பொறுப்பு கூறவேண்டியது யார் என்ற கேள்வி எமக்கு தோன்றினாலும் விடை தேட எம்மால் முடியவில்லை.

தொடர்ந்து பயணித்தோம் பிரச்சினைகள் அற்ற நபர்களை சந்திக்க மாட்டோமா என்ற ஏக்கத்துடன், ஆனால் நமது பார்வைக்கு தென்பட்டது ஒரு பாலகன் காட்டின் நடுவே மணலில் விரிக்கப்பட்ட பாயில் தாயுடனும் தனது சகோதரங்களுடனும் விளையாடும் காட்சி.

20160306_133605

இப்படி எத்தனை பிஞ்சுகளின் சிறுபராயம் மோசமான அனுபவத்தை மாத்திரம் அவர்களுக்குள் விதைக்கிறது? இந்த பாலகன் போன்றவர்களின் வாழ்க்கையை செவ்வனே அமைக்க வழிசமைப்பது யார்? கேள்விகள் மாத்திரம் பெருக விடைகளைத் தேடிய வண்ணம் வவுனியா பயணமானது நமது குழு.

********************

பல்வேறு அபிவிருத்தியுடன் வவுனியா தென்பட்டாலும் உள்ளே செல்லச் செல்ல வவுனியாவின் உண்மை நிலை எமக்கு தௌிவானது.

அழகிய கிராமம் குப்பைகளால் சூழப்பட்டு துர்நாற்றத்துடன் கூடியதாகவும் பார்ப்பவர் முகங்களை சுழிக்கச் செய்வதாகவும் அமைந்தது. பல நாட்களாக குப்பைகள் அகற்றப்படாத நிலையில் அங்கு வாழும் மக்களின் சுகாதார நிலைமை கேள்விக்குறியே.

வவுனியா மாவட்டத்திற்கே பாரிய அச்சுறுத்தலாக காணப்படுவது சிறுநீரக நோய், இதற்கு முக்கிய காரணம் அம்மக்கள் அருந்தும் நீர். இதற்கு சான்று நாம் சந்தித்த திரு திருமதி செபஸ்டியன் தம்பதியினர். இருவருக்கும் சுமார் 65 – 70 வயதிருக்கும்.

அங்கு காணப்படும் கிணற்றிலிருந்து பறுகிய சுத்தமில்லாத குடிநீர் காரணமாக அந்த தாயிற்கு சிறுநீரக நோய் ஏற்பட்டுள்ளது. இப்படி எத்தனை பேர் சிறுநீரக நோயால் அவதியுறுகின்றனர் என்பதை தகுதிவாய்ந்த அதிகாரிகளே ஆராய வேண்டும்.

வவுனியாவுக்கு செல்லும் பிரதான வீதிக்கருகாமையில் பெரியக்கட்டு என்ற பகுதியில் வசித்துவரும் இந்த தம்பதியை மக்கள் சக்தி குழுவினர் இலகுவாக அடையாளங்கண்டனர். இருப்பினும் அந்த பகுதிக்கு சொந்தமான அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் கண்களுக்கு எவ்வாறு இந்த வயோதிப தம்பதிகள் மறைந்தனர் என்பது கேள்விக்குறியே.

மெனிக் பாமில் வசிக்கும் பெண்களுக்கு திருமணத்தின் பின்னர் வேலைவாய்ப்பு அற்ற நிலை, ஒற்றாக்குளம் மக்களுக்கான மீள்குடியேற்றம், கப்பாச்சி பிரதேசத்திற்கான முறையான நீரட விநியோகம் மற்றும் வீதிப்பிரச்சினை என வவுனியாவும் தன் பங்கிற்கு தனது குறைகளை எமது பெட்டியின் இடைவௌிகளை நிரப்புவதற்காக இட்டுச்சென்றது.

இதுமாத்திரமல்ல விளக்குவைத்த குளம், புதியவேலர் சின்ன குளம் மற்றும் அரசன் குளம் ஆகியவற்றில் தற்காலிக குடியிருப்புக்களே அமைக்கப்ட்டுள்ளன. இந்த கிராம மக்கள் எம்மிடம் இறைஞ்சி நின்றது நிரந்தர வீட்டுத்திட்டத்திற்கும் வீதியை செப்பனிடவுமே.

இவை அனைத்தயும் தாண்டி புதுவிளான்குளம் எமது கவனத்தை மட்டுமல்ல கருத்தையும் ஈர்த்தது. ஒரு தமிழ் கிராமம் முற்றுமுழுதாக அழிவடைந்திருந்தது. எனினும் அந்த கிராமம் விவசாயத்திற்கு ஏற்ற செழிப்பான கிராமம். எனவே உரிய அதிகாரிகள் அந்த கிராமத்தை மீள புனரமைத்து விவசாயத்திற்காக மாத்திரம் தமது கிராமத்திற்கு வரும் அம்மக்களை அங்கேயே வாழ்வதற்கு அவன செய்வார்களா என்பது வவுனியா மாவட்டத்தினது மட்டுமல்ல
எம்முடையதும் கேள்வி.

IMG_1864 IMG_1884

IMG_1899

மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்டம் கேள்விகளை கேட்பதுடன் மாத்திரம் நின்றுவிடாது நிச்சயமாக அதற்கான பதில்களையும் பெற்றுக் கொடுக்கும் என்பது திண்ணம்.

எனினும் எதிர்காலம் பற்றிய எதிர்பார்ப்புடன் நிகழ்காலம் கேள்விக்குறியான நிலையில் பலரும் நம் நாட்டில் வாழ்வது கசப்பான விடயமே.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்