குமார் குணரட்னம் நீதிமன்றில் விசேட வாக்குமூலம்

குமார் குணரட்னம் நீதிமன்றில் விசேட வாக்குமூலம்

குமார் குணரட்னம் நீதிமன்றில் விசேட வாக்குமூலம்

எழுத்தாளர் Bella Dalima

24 Mar, 2016 | 5:55 pm

முன்னிலை சோஷலிசக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரட்னத்தின் விளக்கமறியல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கேகாலை நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குமார் குணரட்னம் நீதிமன்றத்தில் இன்று விசேட வாக்குமூலமொன்றை அளித்தார்.

கேகாலை பிரதேசத்தில் பிறந்த தாம், இந்த நாட்டிலேயே பாடசாலைக் கல்வியைக் கற்றதாகவும், 1985 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழக அனுமதி பெற்றதாகவும் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாட்டு உறுப்பினரானதாகவும் அக்கட்சியின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும் குமார் குணரட்னம் நீதீமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி முன்னிலை சோஷலிசக் கட்சி எனும் பெயரில் புதிய கட்சியொன்றை நிறுவியதாகவும், அன்று முதல் தனக்கு விடுக்கப்பட்டுவந்த உயிர் அச்சுறுத்தல் காரணமாக அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பல்வேறு சந்தர்ப்பங்களிலும் தாம் இந்த நாட்டின் பிரஜாவுரிமையை மீள வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்ததாகவும் அதன் பொருட்டு நீதிமன்றின் தயவை நாடியதாகவும் குமார் குணரட்னம் கேகாலை நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

குமார் குணரட்னத்தின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதவான், எதிர்வரும் 31 ஆம் திகதி வழக்கின் தீர்ப்பை வழங்குவதாக அறிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்