மக்களுக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் கூட்டம்: விமல் வீரவங்ச உள்ளிட்ட எழுவருக்கு பிணை

மக்களுக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் கூட்டம்: விமல் வீரவங்ச உள்ளிட்ட எழுவருக்கு பிணை

எழுத்தாளர் Bella Dalima

18 Mar, 2016 | 7:35 pm

கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு முன்பாக மக்களுக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் கூட்டமொன்றை நடத்தியமைக்காக விமல் வீரவங்ச உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக இடம்பெற்று வரும் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றது.

கடந்த பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி நடைபெற்ற கூட்டம் தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸார் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.

மக்களுக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் குறித்த பகுதியில் இவர்கள் செயற்பட்டதாக முறைப்பாட்டாளர்கள் சார்பில் ஆஜரான, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறினார்.

இலங்கையில் சட்டங்களை பாராளுமன்றமே நிறைவேற்றுவதாக இதன்போது சுட்டிக்காட்டிய நீதவான், மக்கள் பிரதிநிதிகளே ஏன் அதனை மீறுகின்றார்கள் என சந்தேகநபர்களிடம் கேள்வி எழுப்பினார்.

எனினும், அவர்கள் அதற்குப் பதிலளிக்க முன்வரவில்லை.

மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலான கூட்டங்கள் அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளதெனவும் பிரதம நீதவான் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் பொலிஸ் கட்டளைச் சட்டத்திற்கு அமைய நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஒழுங்குகளை செய்யுமாறும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரவிற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்தோடு, ஏழு பேரையும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்