கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருமலை வளாகத்தில் இடம்பெற்ற மோதல் குறித்து விசாரணை

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருமலை வளாகத்தில் இடம்பெற்ற மோதல் குறித்து விசாரணை

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருமலை வளாகத்தில் இடம்பெற்ற மோதல் குறித்து விசாரணை

எழுத்தாளர் Staff Writer

18 Mar, 2016 | 12:22 pm

கிழக்கு பல்கலைகழகத்தின் திருகோணமலை வளாகத்தில் இரு மாணவர் குழுக்களிடையே இடம்பெற்ற மோதல் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரால் நியமிக்கப்பட்ட ஒழுக்காற்று குழுவினரால் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை வளாக முதல்வர் வல்லிபுரம் கனகசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை வளாகத்தில் நேற்று (17) ஆரம்பிக்கப்பட்ட இந்த ஒழுக்காற்று விசார​ணைகள் இரண்டாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரிடையும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, திருகோணமலை வளாகத்தின் சித்த மருத்துவ பீடம் மற்றும் முகாமைத்துவ பீடம் ஆகியவற்றிற்கு மறு அறிவித்தல் வரை கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் இரு மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் குறித்து ஆராய ஒழுக்காற்று விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜெயசிங்கத்தால் இந்த விசாரணைக் குழு நேற்று நியமிக்கப்பட்டதாக திருகோணமலை வளாக முதல்வர் வல்லிபுரம் கனகசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை வளாகத்தின் முகாமைத்துவ மற்றும் சித்த மருத்துவ பீட மாணவர்களிடையே கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற மோதலை அடுத்து விரிவுரைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

எனினும் வளாகத்திலும், விடுதிகளிலும் மாணவர்கள் தங்கியிருந்தமையால் விசாரணைகளை மேற்கொள்ளவதில் சிக்கல் நிலை ஏற்பட்டதாகவும் திருகோணமலை வளாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்திலிருந்து நேற்று (17) வெளியேற்றியதை அடுத்து, ஒழுக்காற்று விசாரணைக் குழு நியமிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த குழுவின் விசாரணை அறிக்கையை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்குமாறும் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து நேற்று முதல் மறு அறிவித்தல் வரை திருகோணமலை வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எனினும், பிரயோக விஞ்ஞான பீட மாணவர்கள் தற்போது பரீட்சையின் பின்னரான விடுமுறையில் இருப்பதால் அவர்கள் தங்களின் விடுமுறையின் பின்னர் பல்கலைக்கழகத்திற்கு சமூகமளிக்க முடியும் எனவும் திருகோணமலை வளாக முதல்வர் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த மோதல் சம்பவம் குறித்து பொலிஸரால் முன்னெடுக்கபடும் விசாரணைகள் தொடர்பில் சில மாணவர்கள் தொடர்பான உறுதிப்படுத்தபட்ட தகவல்கள் கோரப்பட்டுள்ளதாகவும், ஒழுக்காற்று விசாரணைக் குழுவின் விசாரணைகளின் பின்னரே அவற்றை சமர்பிக்க எதிர்பார்ப்பதாகவும் திருகோணமலை வளாக முதல்வர் வல்லிபுரம் கனகசிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்