தங்கொட்டுவை சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணை

தங்கொட்டுவை சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணை

தங்கொட்டுவை சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

11 Mar, 2016 | 8:05 pm

தங்கொட்டுவ புஜ்ஜம்பொல பகுதியில் 5 பேருடன் வேன் ஒன்று தீ பற்றி எரிந்தமை தொடர்பிலான விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தங்கொட்டுவ புஜ்ஜங்பொல – இரபடகம வீதியின் கொஸ்ஹேன வத்த பகுதியில் இருந்து பொலிஸரால் இன்று (11)  காலை இந்த வேன் கண்டுபிடிக்கப்பட்டது.

நிதி நிறுவனமொன்றுக்கு சொந்தமானது என கூறப்படும் டபிள்யூ.பி.பி.எஸ். 1080 என்ற இலக்கமுடைய இந்த வாகனம், 119 என்ற பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமையவே கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

மக்கள் நடமாட்டம் குறைந்த இந்த பகுதிக்கு அதிகாலை 2 மணிக்கும் 5 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் வேன் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

வேன் தீயினால் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதுடன் அதிலிருந்த சடலங்கள் அடையாளம் காண முடியாதளவில் எரிந்து போயுருந்ததாக காணப்பட்டுள்ளது

இந்த சடலங்கள் வேனின் பின்புறத்தில் உள்ள ஆசனங்களிலேயே காணப்பட்டதாக எமது செய்தியாளர்கள் கூறினார்.

சாரதி ஆசனம் மற்றும் அதற்கு அருகிலுள்ள ஆசனத்தில் சடலங்கள் காணப்படவில்லை எனவும் அவர்கள் கூறினர்.

இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் வேனுக்குள் வைத்து தீ மூட்டியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

வேனுக்கு அருகேயிருந்து பாதணிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் அங்கிருந்து சுமார் 500 மீற்றர் தூரத்திற்கு வீதியில் இரத்தக்கரை காணப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக வேன் தீபற்றியதாக அனுமானிப்பதற்கான எவ்வித தடையங்களும் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மாரவில மேலதிக நீதவான் பசன் அமரசேன சம்பவ இடத்தில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டார்.

இந்த வேனின் சாரதி பன்னல மாகந்துர பகுதியைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுவதுடன் அவரது மனைவி சம்பவ இடத்திற்கு வந்து வேனை அடையாளம் கண்டுள்ளார்.

சடலங்கள் எரிந்து உருகுழைந்துள்ளதால் தமது கணவரின் சடலம் அங்கு உள்ளதா என்பதை அவரால் அடையாளம் காண முடியாமற்போயுள்ளது.

எவ்வாறாயினும் சுமார் ஒரு வாரமாக தமது கணவர் தொடர்பில் தகவல் கிடைக்கவில்லை என அவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கப்பில செனரத் எனும் இந்த சாரதிக்கு எதிரான வழக்குகள் சில நிலுவையில் உள்ளதாகவும் அவர் லீசிங் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த வேன் கொள்ளுபிட்டியைச் சேர்ந்த பெண் ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் பொலிஸர் கூறினர்.

அவர் இந்த வேனை கொழும்பிலுள்ள நிதி நிறுவனமொன்றுக்கு வழங்கியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இதேவேளை, இந்த இடத்தில் ஏற்கனவே இரண்டு சந்தர்ப்பங்களில் கொலை சம்பங்கள் இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் கூறினர்.

பிரேத பரிசோதனைக்காக சடலங்கள் நீர்கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்