அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரின் இறுதிக்கிரியை எதிர்வரும் ஞாயிறன்று இடம்பெறும்

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரின் இறுதிக்கிரியை எதிர்வரும் ஞாயிறன்று இடம்பெறும்

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரரின் இறுதிக்கிரியை எதிர்வரும் ஞாயிறன்று இடம்பெறும்

எழுத்தாளர் Staff Writer

10 Mar, 2016 | 6:45 pm

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் கலகம ஶ்ரீ அத்த தஸ்ஸீ ​தேரரின் தகனக் கிரியைகளை பூரண அரச மரியாதையுடன் நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மகாநாயக்க தேரரின் இறுதிக் கிரியை நடைபெறவுள்ள, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தேசிய துக்க தினமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

திடீரென கீழே விழுந்ததை அடுத்து நேற்றிரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து கலகம ஶ்ரீ அத்ததஸ்ஸி மகாநாயக்கத் தேரர் காலமானார்.

மகாநாயக்கத் தேரரின் பூதவுடல், இன்று காலை கண்டி அஸ்கிரிய உருலேவத்த விஹாரைக்கு வாகன பவனிமூலம் எடுத்துச் செல்லப்பட்டது.

விஹாரையில் இன்று பிற்பகல் நான்கு மணிவரை வைக்கப்பட்டிருந்த பூதவுடல் பொது மக்களின் அஞ்சலிக்காக கண்டியிலுள்ள மண்டபமொன்றில் வைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை பூதவுடல் அங்கு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பகல் இந்த மண்டபத்திலிருந்து பூதவுடல் தாங்கிய வாகனப் பவனியை ஆரம்பிக்கவும் பிற்பகல் 2.30 க்கு அஸ்கிரிய பொலிஸ் விளையாட்டரங்கில் இறுதிக் கிரியைகளை நடாத்தவும் இன்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

அத்துடன் கண்டி மாநகர எல்லையிலுள்ள மதுபான, இறைச்சி மற்றும் மீன் விற்பனை நிலையங்கள் அனைத்தையும் மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

1922 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் திகதி மாத்தளை பள்ளெசியபத்துவ கிராமத்தில் பிறந்த குலதுங்க முதியான்சேலாகே கிரிபண்டார தனது 14 ஆவது வயதில் 1936 ஆம் ஆண்டு கலகம தம்மசித்தி ஶ்ரீ தம்மானந்த அத்ததஸ்ஸி என்ற பெயரில் துறவுறம்பூண்டார்.

1937 ஆம் ஆண்டிலிருந்து 10 வருடங்கள் மாததளை ஶ்ரீ தர்மராஜ பிரிவெனாவில் கல்விகற்ற அத்ததஸ்ஸீ ​தேரர் 1947 ஆம் ஆண்டு சிங்களம், பாலி. சமஸ்கிரதம் மற்றும் தமிழ் ஆகிய பாடங்களில் சிறப்புத் தேர்ச்சி பெற்றார்.

பண்டிதர் பட்டம்பெற்ற தேரர் தத்தர்மாச்சாரிய பட்டத்தையும் 1950 ஆம் ஆண்டு அபிதர்மாச்சாரிய பட்டத்தையும் பெற்றார்.

கலகம ஶ்ரீ அத்ததஸ்ஸீ ​தேரர் 1950 ஆம் அண்டு மஜ்ஜிம பாணக்க என்ற பட்டத்தையும் தன்வசப்படுத்தினார்.

சியம் பிரிவின் அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கராக 1999 ஆம் ஆண்டு அத்ததஸ்ஸி தேரர் நியமிக்கப்பட்டார்.

மூத்த பௌத்த பிக்குவாக கடந்த சில தசாப்தங்களாக உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் பௌத்த தர்மத்தின் முன்னெற்றத்திறாக மகாநாயக்கத் தேரர் மகத்தான சேவையை ஆற்றியுள்ளார்.

கடந்த வருடம் மே மாதம் எட்டாம் திகதி அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கத் தேரராக நியமிக்கப்பட்ட கலகமஶ்ரீ அத்ததஸ்ஸி தேரர் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தர்மத்திற்கு ஏற்ப ஆட்சியாளர்களுக்கும், மகா சங்கத்தினருக்கும், பொது மக்களுக்கும் வழிகாட்டல்களை வழங்கினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்