வடக்கு, கிழக்கு, வட மேல் மாகாணத்தில் ”கறுப்புப் பங்குனி” கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுப்பு

வடக்கு, கிழக்கு, வட மேல் மாகாணத்தில் ”கறுப்புப் பங்குனி” கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுப்பு

எழுத்தாளர் Bella Dalima

08 Mar, 2016 | 3:48 pm

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் கறுப்புப் பங்குனி எனும் தொனிப்பொருளின் கீழ் கவனயீர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அண்மைக்காலமாக பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் விதமாக இம்முறை மகளிர் தினத்தை கறுப்புப் பங்குனியாக அடையாளப்படுத்தியுள்ளதாக மகளிர் அமைப்புக்கள் தெரிவித்தன.

”மகளிர் தினத்தினை இருண்ட தினமாகக் கருதுகின்றோம்” என்று வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், கொலைகளுக்கு நீதி கிடைக்கவில்லை இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, யாழ் நகரில் வீடுகளிலும், கடைகளிலும் கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்டிருந்தன.

கிளிநொச்சி பழைய கச்சேரி முன்னால் இன்று முற்பகல் 10.30 அளவில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மகளிர் தினத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் பெண்கள் கைகளில் கறுப்புப் பட்டிகளை அணிந்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன், புத்தளம் மாவட்டத்தில் மகளிர் அமைப்புக்கள் இருண்ட பங்குனி எனும் தொனிப் பொருளில் மகளிர் தின நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன.

புத்தளத்தில் பாலாவி நகரில் மகளிர் ஒன்று கூடி கறுப்பு ஆடைகளை அணிந்தவாறு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திலும் கறுப்புப் பங்குனியை அடையாளப்படுத்தும் விதத்தில் பதாதைகளை ஏந்தியவாறு பெண்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

மட்டக்களப்பு காந்தி பூங்கா அருகே இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்