சர்வதேச மகளிர் தினமும் தொடரும் துன்பியல் சம்பவங்களும் 

சர்வதேச மகளிர் தினமும் தொடரும் துன்பியல் சம்பவங்களும் 

எழுத்தாளர் Bella Dalima

08 Mar, 2016 | 10:13 am

இன்று சர்வதேச மகளிர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

”சக்தி மிக்க பெண்ணுக்கு வளமான நாளை” எனும் தொனிப்பொருளின் கீழ் இம்முறை மகளிர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றடுக்க உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்றும் பெரும் போராட்டங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

பெண்களின் சமத்துவத்தையும் உரிமைகளையும் வலியுறுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி சர்வதேச பெண்கள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.

வரலாற்றுக் காலந்தொட்டு பெண்கள் போகப்பண்டங்களாகவும், அடிமைகளாகவும், உரிமையற்றவர்களாகவும் காணப்பட்ட நிலையிலிருந்து படிப்படியாக மீண்ட நிலையை இந்நாளின் பின்னணியாகக் கொள்ளலாம்.

1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் எனும் கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின்போது பெண்கள் பலர் தம் போர்க்கொடிகளை உயர்த்திப் பிடித்தனர்.

ஆணுக்கு நிகரான உரிமை, வேலைக்கேற்ற ஊதியம், 8 மணி நேர வேலை, வாக்குரிமை, பெண்ணடிமைத்தனத்திலிருந்து விடுதலை என்பன அவர்களின் பிரதான கோரிக்கைகளாக அமைந்தன.

கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மன்னர் லூயிஸ் வாக்குறுதி அளித்திருந்த போதும், அவற்றை நிறைவேற்றாமலேயே அவர் முடிதுறந்தார்.

இதனால், ஐரோப்பிய நாடுகளிலும் தங்கள் உரிமைக்கான குரல்களை பெண்கள் எழுப்பத் தொடங்கினர். இவர்களுடன் இத்தாலிப் பெண்களும் கிளர்ச்சியில் கைகோர்த்தனர்.

கிரீஸ், ஆஸ்த்திரியா, டென்மார்க், ஜெர்மனி என இந்தப் போராட்டத்திற்கான பெண்களின் ஒத்துழைப்பு பல்கிப் பெருகியதால் ஆளும் வர்க்கம் சற்று அசைந்து கொடுக்கத் தொடங்கியது.

பிரான்ஸ் நாட்டில் புருஸ்லியனில் 2 ஆவது குடியரசை நிறுவிய லூயிஸ் ப்ளாங்க், 1848 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி பெண்களுக்கு வாக்குரிமை வழங்கவும், அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடமளிக்கவும் ஒப்புதல் அளித்தார்.

அதுவே பெண்கள் தினத்தின் அடிப்படை வித்தாக அமைந்தது.

உழைக்கும் மகளிர் தினம் இன்று அனைத்துத் தரப்புப் பெண்களாலும் கொண்டாடப்படுவதற்கு, மூல வித்துக்களாக இருந்த பெண் போராளிகளை, அவர்களின் தீவிர போராட்டங்களை என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டிய நாள் இது.

என்றாலும், வியாபார நோக்கங்களுக்காகவும் தள்ளுபடிகள் சலுகைகளை அறிவிக்கும் நாளாகவும் இந்நாள் மாற்றம் பெற்று வருகின்றமை வேதனைக்குரியது.

1921 ஆம் ஆண்டு முதல் மார்ச் 8 ஆம் திகதி உலக உழைக்கும் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1975 ஆம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக ஐ.நா பிரகடனப்படுத்தியது. இவ்வாறான முன்னெடுப்புகளுக்கு மத்தியிலும் பெண்கள் மீது திணிக்கப்பட்ட பெண்ணடிமைத்தனமும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளும் பாலியல் துஷ்பிரயோகங்களும் இன்றளவும் தொடரும் துன்பியல் சம்பவங்கள் என்பதே நிதர்சனம்!


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்