குளியாப்பிட்டிய சிறுவனுக்கு கண்டி திருத்துவக் கல்லூரியில் கல்வி கற்பதற்கு வாய்ப்பு

குளியாப்பிட்டிய சிறுவனுக்கு கண்டி திருத்துவக் கல்லூரியில் கல்வி கற்பதற்கு வாய்ப்பு

குளியாப்பிட்டிய சிறுவனுக்கு கண்டி திருத்துவக் கல்லூரியில் கல்வி கற்பதற்கு வாய்ப்பு

எழுத்தாளர் Staff Writer

08 Mar, 2016 | 4:41 pm

சர்ச்சைக்குரிய குளியாப்பிட்டிய சிறுவனை தமது பாடசாலையில் சேர்த்துக்கொள்வதற்கு கண்டி திருத்துவக் கல்லூரி விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறுவனின் பெற்றோர் எச்.ஐ.வி.தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரவிய வதந்தியால் 6 வயதான இந்த சிறுவனுக்கு பாடசாலை கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த வதந்தியை அடுத்து குளியாப்பிட்டிய வித்தியாலயத்தின் மாணவர்களை அவர்களது பெற்றொர் வேறு பாடசாலைகளுக்கு அழைத்துச் செல்ல முற்பட்டதை அடுத்து இந்த சிறுவனுக்கு பாடசாலையில் கல்வி கற்க முடியாத சூழல் உருவானது.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தமது பிள்ளைக்கு பாடசாலை ஒன்றை வழங்குமாறும் கோரியும் சிறுவனின் தாய் குளியாப்பிட்டிய வலயக் கல்விப் பணிமனை நுழைவாயிலில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டதை அடுத்து இந்த செய்தி உலகளாவிய ரீதியில் பரவியது.

சிறுவனை பாடசாலையில் சேர்த்துக்கொள்ளாமை தொடர்பில் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்ததுடன் சிறுவனின் தயார் உயர்நீதினமற்த்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார்.

எனினும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காத நிலையில் இறுதியில் ஜனாதிபதியின் தலையீட்டை அடுத்து கல்வி அமைச்சு முயற்சிகளை மேற்கொண்டது.

கல்வி அமைச்சு மற்றும் கண்டி திருத்துவக் கல்லூரிக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து சிறுவனை அந்த கல்லூரியில் சேர்த்துக்கொள்வதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவனின் கல்விச் செலவுகளையும் திருத்துவக் கல்லூரி ஏற்றுள்ளது.

அத்தோடு சிறுவனின் தாயார் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்வதற்கு ஏதுவாக கண்டியில் அவர்களை குடியமர்த்தவும் அவர்களுக்கான நலன்புரி விடயங்களை கல்வி அமைச்சின் செலவில் முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்