இந்திய மீனவர் விடுதலைக்கு பிரதமர் மோடியின் ஒத்துழைப்பைக் கோரி ஜெயலலிதா கடிதம்

இந்திய மீனவர் விடுதலைக்கு பிரதமர் மோடியின் ஒத்துழைப்பைக் கோரி ஜெயலலிதா கடிதம்

எழுத்தாளர் Bella Dalima

08 Mar, 2016 | 12:02 pm

இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விரைவில் விடுதலை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரி தமிழக முதலமைச்சர் ​ஜெயலலிதா ஜெயராம், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்திய மீனவர்கள் 29 பேர் இலங்கை கடற்படையினரால் நேற்று முன்தினம் (06) கைது செய்யப்பட்டமையைக் கவனத்திற்கொண்டு தமிழக முதல்வர் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

தற்போது இலங்கையில் 64 இந்திய மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் 77 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த மீனவர்களை விடுதலை செய்வதற்கு முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என ஜெயலலிதா ஜெயராம் இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்திய மீனவர்களை விடுதலை செய்வதற்கு இதுவரையில் எவ்விதத் தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர நியூஸ்பெஸ்டிற்குத் தெரிவித்தார்.

இலங்கை கடல் எல்லையில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் விரிவுபடுத்துமாறு கடற்படைக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்