மக்கள் சக்தி, இல்லங்கள் தோறும்: மன்னாரில் இன்றும் மக்களின் குறைகள் கேட்டறியப்பட்டன

மக்கள் சக்தி, இல்லங்கள் தோறும்: மன்னாரில் இன்றும் மக்களின் குறைகள் கேட்டறியப்பட்டன

எழுத்தாளர் Bella Dalima

05 Mar, 2016 | 10:31 pm

பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட நியூஸ்பெஸ்ட்டின் மக்கள் சேவையான ‘மக்கள் சக்தி, இல்லங்கள் தோறும்’ திட்டத்தின் 11 ஆவது நாள் இன்றாகும்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடன் நியூஸ்பெஸ்ட் இந்தத் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

வடமாகாணத்தின், மன்னார் மாவட்டத்தில் ‘மக்கள் சக்தி, இல்லங்கள் தோறும்’ திட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.

கடலால் சூழப்பட்டு ஒரு தரைவழிப்பாதையை மாத்திரம் கொண்ட மாவட்டமாக மன்னார் மாவட்டம் விளங்குகின்றது.

தலைமன்னார் கிராமத்தில் இன்றைய அங்குரார்ப்பண நிகழ்வுகள் நடைபெற்றன.

அதன் பின்னர் இரண்டு குழுக்களாகச் சென்று மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து கொண்டனர்.

மக்கள் சக்தியின் ஒரு குழுவினர் மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நேரடியாகச் சென்று அறிந்து கொண்டனர்.

மன்னார் மாவட்டத்தில் சுமார் 95 வீதமான மக்கள் மீன்பிடித் தொழிலையே நம்பி வாழ்ந்து வருகின்றனர்.

எனினும், இந்திய ட்ரோலர் படகுகளின் ஆக்கிரமிப்பால் மன்னார் மாவட்ட மீனவர்கள் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மக்கள் சக்தியின் மற்றைய குழுவினர் பேசாலை 50 வீட்டுத்திட்ட கிராமத்திற்கு விஜயம் செய்தனர்.

யுத்தத்தின் பாதிப்பினால் வீட்டினை இழந்த மக்களுக்கு இதுவரை வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படவில்லை.

இந்தியாவிற்குப் புலம்பெயர்ந்து மீண்டும் பேசாலையில் குடியேறிய இரு குடும்பங்களுக்கு இதுவரை எதுவித உதவிகளும் கிடைக்கபெறவில்லை.

இதேபோல், உதயபுரம் கிராமத்தில் சுமார் 75 குடும்பங்கள் வசித்து வருகின்ற போதிலும் அவர்களுக்கான பிரதான வீதி நீண்ட காலமாக செப்பனிடப்படாமையால் போக்குவரத்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, தென்மாகாணத்தின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சூரியவெவ, இகலகுருதான மற்றும் பகழ குருதான ஆகிய கிராமங்களுக்குச் சென்ற எமது குழுவினர், மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அறிந்து கொண்டனர்.

மற்றைய குழுவினர் கபுகினிஸ்ஸ, மஹிதுகம, வெஹேரபெலஸ்ஸ மற்றும் மீஹகஜதுர கிராமத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.

மீஹகஜதுர பகுதி மக்கள் யானைகளின் நடமாட்டத்தினால் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

வடமத்திய மாகாணத்தின் மக்கள் சக்தி குழுவினர் அத்தனகடவல, தியபெதும, அவிதிமுலான, பகமுன, அலஹார, சரபிம, நிகபிட்டி மற்றும் ஹாகல ஆகிய கிராமங்களுக்குச் சென்றிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்