அரசியல் கைதிகள் 12 ஆவது நாளாக உண்ணாவிரதம்: இந்து மாமன்றம் ஜனாதிபதிக்கு கடிதம்

அரசியல் கைதிகள் 12 ஆவது நாளாக உண்ணாவிரதம்: இந்து மாமன்றம் ஜனாதிபதிக்கு கடிதம்

எழுத்தாளர் Bella Dalima

05 Mar, 2016 | 7:14 pm

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் இன்று 12 ஆவது நாளாகவும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் உடல் நிலையில் பாதிப்புகள் ஏதும் இல்லை என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டார்.

குறித்த கைதிகளை சிறைச்சாலைகள் வைத்தியசாலையின் வைத்தியர் தொடர்ந்தும் அவதானித்து வருவதாகவும் அவர் கூறினார்.

தம் மீதான சட்ட நடவடிக்கைளை விரைவுபடுத்தி தம்மை விடுதலை செய்யக்கோரியே கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் 13 அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, இன்னமும் காலம் தாழ்த்தாது தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு அகில இலங்கை இந்து மாமன்றம் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் சிவராத்திரி நாளன்று அல்லது தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் இவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

300 ஆண்டுகள் ஆயுட்தண்டனை வழங்கப்பட்டுள்ள இந்து மத குருவை சிவராத்திரி தினமான 7 ஆம் திகதிக்கு முன்னராவது விடுவிக்குமாறும் அகில இலங்கை இந்து மாமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறித்த மத குருவை பார்வையிடுவதற்கு அனுமதியளிக்குமாறு பல்வேறு தரப்பினரிடமும் கோரியிருந்த போதிலும் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகள் மற்றும் இடம்பெயர்ந்த அகதிகள் தற்போது உண்ணாவிரதங்களை மேற்கொண்டு வருவதையும் அகில இலங்கை இந்து மாமன்றம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்