பசுமை எரிசக்தி திட்டத்திற்கு சம்பூரைப் பயன்படுத்த முடியாதா என புத்திஜீவிகள் கேள்வி

பசுமை எரிசக்தி திட்டத்திற்கு சம்பூரைப் பயன்படுத்த முடியாதா என புத்திஜீவிகள் கேள்வி

எழுத்தாளர் Bella Dalima

04 Mar, 2016 | 10:32 pm

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மின்சாரத் தேவையை புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களைக் கொண்டு ஈடு செய்வதற்கு மின் சக்தி அமைச்சு திட்டங்களை வகுத்துள்ள நிலையில், சம்பூர் அனல் மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான முயற்சி சந்தேகத்தை தோற்றுவிப்பதாக புத்திஜீவிகள் குறிப்பிட்டனர்.

புவி வெப்பமடைவதால் ஏற்படுகின்ற காலநிலை மாற்றங்களுக்குத் தீர்வாக புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களின் பங்களிப்பை அதிகரிப்பதே மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத் தக்க சக்தி வளங்கள் அமைச்சின் நோக்கமாகும்.

அமைச்சினால் வெளியிடப்பட்ட ” எரிசக்தி நிறைந்த நாடு” எனும் பத்தாண்டு அபிவிருத்தித் திட்டத்தின் நோக்கமும் 2030 ஆம் ஆண்டளவில் ஒட்டுமொத்த மின்சாரத் தேவைப்பாட்டினை புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்கள் மற்றும் சுற்றாடலுக்கு தீங்கு விளைவிக்காத வளங்களைக் கொண்டு ஈடு செய்வதாகவே அமைந்துள்ளது.

2013 ஆம் ஆண்டில் 4 வீதமாக இருந்த நிலக்கரி பயன்பாட்டினை 2030 ஆம் ஆண்டளவில் ஒரு வீதமாகக் குறைப்பதற்கும் அதில் திட்டமிடப்பட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க சக்தி பயன்பாட்டினை ஊக்குவிப்பதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ள நிலையிலேயே சம்பூரில் 500 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான அனல் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளது.

சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்காக இந்தியாவும் இலங்கையும் ஏற்படுத்திக்கொண்டுள்ள உடன்படிக்கையிலும் குறைபாடுகள் காணப்படுவதாக பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டினர்.

நிலக்கரி அனல் மின் உற்பத்தி நிலையங்களில் பிறப்பாக்கப்படுகின்ற ஒரு மின்சார அலகின் விலை ஐந்து ரூபாவுக்கும் 8 ரூபாவுக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையில் அமையும் என மின்சார சபை கூறினாலும் அனைத்து செலவுகளையும் கவனத்திற்கொள்ளும்போது ஒரு மின்சார அலகின் விலை 27 ரூபாவுக்கும் மேற்பட்டதாகவே அமைவதாக புத்திஜீவிகள் சுட்டிக்காட்டினர்.

நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களால் ஏற்படுகின்ற கண்ணுக்குத் தெரியாத சுகாதாரப் பிரச்சினைகளை விலை கொடுத்து வாங்குவதற்குப் பதிலாக பொருளாதாரம் மற்றும் சூழலுக்கு முக்கியமான பசுமை எரிசக்தி திட்டத்திற்காக சம்பூர் போன்ற பகுதிகளை பயன்படுத்த முடியாதா எனவும் புத்திஜீவிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சம்பூரில் அனல் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்தும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்