ரவிராஜ் கொலை வழக்கு விசாரணை: விமான சேவை உத்தியோகத்தர் ஒருவர் சாட்சியம்

ரவிராஜ் கொலை வழக்கு விசாரணை: விமான சேவை உத்தியோகத்தர் ஒருவர் சாட்சியம்

எழுத்தாளர் Bella Dalima

02 Mar, 2016 | 7:02 pm

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பான வழக்கு விசாரணையில் விமான சேவை உத்தியோகத்தர் ஒருவர் இன்று சாட்சியமளித்துள்ளார்.

ஏஞ்சலோ ரோய் என்ற விமான சேவை ஊழியரே கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று சாட்சியம் வழங்கியுள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தெஹிவளையிலுள்ள தனது வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது, நாராஹென்பிட்ட பகுதியில் சென்றுகொண்டிருந்த பழுப்பு சிவப்பு நிற (Maroon) ஜீப் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந் தெரியாத ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக நீதவான் முன்னிலையில் அவர் சாட்சியமளித்துள்ளார்.

ஏற்கனவே குறித்த சாட்சியாளரிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வாக்கு மூலம் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாட்சியாளரின் சாட்சிப் பதிவின் பின்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் 16 ஆம் திகதி வரை மீண்டும் நீதவான் திலன கமகேவினால் ஒத்திவைக்கப்பட்டது.

இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 7 சந்தேகநபர்களில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கடற்படை வீர்ர்கள் மூவரின் விளக்கமறியல் தொடர்ந்தும் அடுத்த வழக்கு விசாரணை வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 4 சந்தேகநபர்களுக்கு ஏற்கனவே பிணை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது 7 சந்தேகநபர்களும் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்