ஊடகவியலாளர் மெத்யூ லீக்கு ஆதரவாக நல்லூர் கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆர்ப்பாட்டம்

ஊடகவியலாளர் மெத்யூ லீக்கு ஆதரவாக நல்லூர் கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

01 Mar, 2016 | 10:32 pm

நியூயார்க்கிலுள்ள ஐ.நா தலைமையகத்திலிருந்து ஊடகவியலாளரான மெத்யூ லீ வெளியேற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகளின் தலைமையகத்திலிருந்து கடந்த 19 ஆம் திகதி, தமது செய்திச் சேவையின் நிறுவுனரான மெத்யூ லீ பலவந்தமாக வெளியேற்றப்பட்டதாக Inner City Press தெரிவித்திருந்தது.

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தலைமையில் நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக
இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

பின்னர், நல்லூர் கோவில் வீதியிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் சென்றனர்.

குறித்த ஊடகவியலாளரை, ஐ.நா தலைமையகத்தில் செயற்படுவதற்கு அனுமதிக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதன்போது தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் போராட்டக்காரர்களினால் ஐ.நா அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது.

இதனையடுத்து, வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்ததாவது,

[quote]உலகின் மொத்த வியாபாரிகளாக செயற்பட்ட சில நாடுகளுடன் சில்லறை வியாபாரிகளாக செயற்பட்ட எங்களுடைய சில தமிழ் தலைமைத்துவங்கள் கூட எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மூடி மறைத்து உண்மைக்குப் புறம்பாக ஐ.நாவில் பேசிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், தனி மனிதனாக மெத்யூ லீ அநியாயங்களைக் கண்டு தட்டிக்கேட்டார். இன அழிப்பு நடந்த போது அமெரிக்கா உட்பட ஐ.நாவும் சேர்ந்து பல மறைப்புகளை செய்ய முற்பட்ட போது, அந்தத் தகவல்களை 2009 இல் வெளிக்கொண்டு வந்த ஒரு உன்னதமான மனிதராக எங்களுடைய நண்பராக மெத்யூ லீயை நாங்கள் பார்க்கின்றோம்.[/quote]

வட மாகாண சபை உறுப்பினர், எம்.கே சிவாஜிலிங்கம் பின்வருமாறு தெரிவித்தார்.

[quote]இன்னர் சிற்றி பிரஸ் என சொல்லப்படுகின்ற ஊடகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற மெத்யூ ரஸல் லீ அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கு எடுக்கப்படுகின்ற முயற்சியானது ஊடகத்துறையினரது பங்களிப்பை அப்புறப்படுத்தி, இந்தப் பிரச்சினையை மெல்ல மெல்ல சாகடிக்கின்ற முயற்சியா என சந்தேகம் எமக்கு எழுகின்றது. ஆகவே, எங்களுடைய மக்களுக்காக நிரந்தரமான ஒரு தீர்வு கிடைக்கும் வரை, எங்களுடைய இந்தப் பிரச்சினைகளுக்கு, போர்க்குற்றங்களுக்கு, இனப்படுகொலைகளுக்கு நீதி கோருகின்ற பயணம் தொடரும்.[/quote]

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்