அரசியலமைப்பு சீர்திருத்தம்: இன்று அம்பாறையில் அமர்வு

அரசியலமைப்பு சீர்திருத்தம்: இன்று அம்பாறையில் அமர்வு

அரசியலமைப்பு சீர்திருத்தம்: இன்று அம்பாறையில் அமர்வு

எழுத்தாளர் Bella Dalima

27 Feb, 2016 | 3:38 pm

அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான மக்களின் யோசனைகளைக் கேட்டறியும் குழுவின் அம்பாறை மாவட்டத்திற்கான அமர்வு இன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த அமர்வு அம்பாறை மாவட்ட செயலகத்தில் நாளை மறுதினமான திங்கட்கிழமையும் நடைபெறவுள்ளது.

உத்தேச புதிய அரசியலமைப்புக்கான மக்களின் யோசனைகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அம்பாறையில் பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளால் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான யோசனைகள் முன்மொழியப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

வடக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் கொழும்பிலும் மக்களின் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான யோசனைகளைத் திரட்டியுள்ள இந்த குழு, கடைசியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக அமர்வுகளை நடத்தியிருந்தது.

அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான மக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் குழுவிற்கு இதுவரை சுமார் 4000 யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்தக் குழுவின் தலைவரான சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்தார்.

இவற்றுள், சுமார் 2500 வாய்மூல யோசனைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

மேலும், எழுத்துமூலமும், மின்னஞ்சல் மற்றும் கடிதங்கள் ஊடாகவும் சுமார் 1500 யோசனைகள் தமது குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சட்டத்தரணி லால் விஜேநாயக்க கூறினார்.

பொதுமக்கள், சிவில் அமைப்புகள், மகளிர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் அரச சார்பற்ற குழுக்கள், மதத் தலைவர்கள், புத்தி ஜீவிகள் என பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களின் முன்மொழிவுகளை அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான யோசனைகளை ஏற்கும் குழு இதுவரை பதிவுசெய்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்