வவுனியா மாணவி கொலை: ஹர்த்தாலால் வடக்கு ஸ்தம்பிதம்

வவுனியா மாணவி கொலை: ஹர்த்தாலால் வடக்கு ஸ்தம்பிதம்

எழுத்தாளர் Bella Dalima

24 Feb, 2016 | 9:43 pm

வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் 13 வயது மாணவி, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து இன்று வட மாகாணத்தில் முழு கடையடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான பாடசாலைகள் இன்று மூடப்பட்டிருந்ததுடன், தனியார் பஸ் சேவை இடம்பெறவில்​லை.

பூரண ஹர்த்தால் காரணமாக யாழ்ப்பாணம் இன்று வெறிச்சோடிக்காணப்பட்டது.

கிளிநொச்சியிலும் முழு கடையடைப்புப் போராட்டம் காரணமாக அன்றாட நடவடிக்கைகள் அனைத்தும் ஸ்தம்பிதமடைந்திருந்தன.

அரச திணைக்களங்கள் வழமைபோல் இயங்கிய போதிலும் மக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.

மேலும், பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை குறைவானமையால் கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் தடைப்பட்டன.

இதேவேளை, வவுனியா மாணவியின் கொலைக்கு நீதி கோரி முல்லைத்தீவிலும் இன்று முழு கடையடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவில் அரச அலுவலகங்களின் செயற்பாடும் மட்டுப்படுத்தப்பட்டே காணப்பட்டது.

வவுனியாவிலும் இன்று முழு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

தனியார் மற்றும் அரச வங்கிகள் திறந்து காணப்பட்ட போதிலும் அதிகாரிகளின் வருகை குறைவாகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மன்னாரில் சட்டத்தரணிகள் சங்கம் இன்று பனிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தது.

மன்னார் சட்டத்தரணிகள் சங்கம் இன்றைய தினம் நீதிமன்ற செயற்பாடுகளை நிறுத்தி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

வவுனியா, உக்குளாங்குளத்தைச் சேர்ந்த கங்காதரன் ஹரிஸ்ணவி கடந்த 16 ஆம் திகதி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தின் இரண்டாவது பிள்ளையான 13 வயதான ஹரிஸ்ணவி, வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தமை பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் இதுவரை சந்தேகநபர் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்