மக்கள் சக்தி, இல்லங்கள் தோறும்: வரணி மக்களைச் சந்தித்த நியூஸ்பெஸ்ட் குழுவினர்

மக்கள் சக்தி, இல்லங்கள் தோறும்: வரணி மக்களைச் சந்தித்த நியூஸ்பெஸ்ட் குழுவினர்

எழுத்தாளர் Bella Dalima

24 Feb, 2016 | 10:37 pm

மக்களின் பிரச்சினைகளை ஆராயும் நியூஸ்பெஸ்ட் ”மக்கள் சக்தி, இல்லங்கள் தோறும்” நாடளாவிய திட்டம் இன்று ஆரம்பமானது.

யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் பிபிலை ஆகிய பகுதிகளைக் கேந்திரமாகக் கொண்டு இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடன் நியூஸ்பெஸ்ட் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

25 மாவட்டங்களும் உள்ளடங்கும் வகையில் கஷ்டப்பிரதேசங்களுக்குச் சென்று, அங்கு மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை ஆராயும் இந்த பாரிய திட்டம் அடுத்த மாதம் 18 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

நியூஸ்பெஸ்ட்டின் ”மக்கள் சக்தி, இல்லங்கள் தோறும்” திட்டம் யாழ்ப்பாணம் – வரணி சுட்டிபுரம் அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜைகளை அடுத்து ஆரம்பமாகியது.

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் கஷ்டப்பிரதேசமொன்றில் அமைந்துள்ள வரணி மக்கள் தம்மைச் சந்திக்க வந்திருந்த நியூஸ்பெஸ்ட் குழுவினரை அன்பாக வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து நியூஸ்பெஸ்ட் குழாத்தினர் வீடு வீடாகச் சென்று மக்களின் பிரச்சினைகளை ஆராயும் திட்டத்தை ஆரம்பித்தனர்.

வரணி வடக்கு, கரம்பைக்குருச்சி மேற்கு, கச்சாய் ஆகிய பகுதிகளிலுள்ள மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிய நியூஸ்பெஸ்ட்டின் ஒரு குழுவினர் சென்றிருந்தனர்.

மற்றுமொரு குழுவினர் குடமியன், நாவற்காடு, மிரிசுவில் ஆகிய பகுதிகளுக்குச் சென்று மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தனர்.

இதேவேளை, நியூஸ்பெஸ்ட்டின் மற்றுமொரு குழுவினர் புத்தளம் – மணல் குன்று கிராமத்தில் மக்கள் சக்தி
இல்லங்கள் தோறும் திட்டத்தை இன்று முற்பகல் ஆரம்பித்தனர்.

புத்தளம் மாவட்ட செயலாளர் எம்.எச்.எம்.சித்ரானந்த, புத்தளம் பிரதேச செயலாளர் மொஹமட் மலிக், புத்தளம்
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பீ.எல்.பி.சதுன்கஹவத்த, நியூஸ்பெஸ்ட் பணிப்பாளர் – பொது முகாமையாளர்
யசரத் கமல்சிறி ஆகியோரும் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

ஆரம்ப நிகழ்வின் பின்னர் இரண்டு குழுக்களாகப் பிரிந்து கஷ்டப் பிரதேசங்களிலுள்ள மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்கு எமது குழுவினர் புறப்பட்டுச் சென்றனர்.

ஒரு குழுவினர் சென்மன்தலுவ, 20 வீடுகள், முள்ளிபுரம், ரத்மல்யாய, பண்டாரநாயக்கபுர, சேனகுடியிருப்பு, பாச்சான்ஓடை உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்று மக்களை சந்தித்தனர்.

மற்றைய குழுவினர் சிரம்பிஅடிய, மானசேரிய, கருவலகஸ்வெவ 7 ஆம் கட்டை உள்ளிட்ட கிராமங்களுக்குச் சென்றனர்.

வரலாற்று சிறப்புமிக்க பிபிலை உணுகொல்ல புராண ரஜமகா விஹாரையில் இடம்பெற்ற மத வழிபாடுகளை அடுத்து மூன்றாவது குழுவினர் வெல்லஸ்ஸ பகுதியில் தமது சமூகப் பணியை ஆரம்பித்தனர்.

ரதுகல, நில்கல, புலுபிட்டிய, தேரவ உள்ளிட்ட கஷ்டப் பிரதேசங்களுக்குச் சென்று மக்களின் பிரச்சினைகளை எமது குழுவினர் ஆராய்ந்தனர்.

உரிய கவனம் செலுத்தப்படாத இவ்வாறான கஷ்டப்பிரதேசங்களிலுள்ள மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெறுவதற்கான வழியை அமைக்கும் ‘மக்கள் சக்தி, இல்லங்கள் தோறும்’ திட்டத்தின் ஊடாக நாளைய தினம் மேலும் பல பிரதேசங்களுக்குச் செல்வதற்கு எமது குழுவினர் தயாராகவுள்ளனர்.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்