ஜயந்த விஜயசேகர மேசை மீது ஏறியதால் கிழக்கு மாகாண சபை அமர்வு  10 நிமிடங்கள் ஒத்திவைப்பு 

ஜயந்த விஜயசேகர மேசை மீது ஏறியதால் கிழக்கு மாகாண சபை அமர்வு  10 நிமிடங்கள் ஒத்திவைப்பு 

எழுத்தாளர் Bella Dalima

23 Feb, 2016 | 6:48 pm

கிழக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வின்போது, இணைந்த வட கிழக்கு பிரேரணை தொடர்பில் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு, மாகாண சபை உறுப்பினர் ஜயந்த விஜயசேகர விடுத்த கோரிக்கையால் சபை நடவடிக்கை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மாகாண சபையின் 53 ஆவது அமர்வு தவிசாளர் சந்திரதாச கலபதி தலைமையில் இன்று நடைபெற்றது.

இன்றைய அமர்வில், தமிழ் தேசியிக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கடற்றொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்ட மூலம் கிழக்கு மாகாண ஆளுனரின் அங்கீகாரத்தின் பின்னர், கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்திற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட்டினால் முன்வைக்கப்பட்டது.

இந்த சட்ட மூலத்திற்கான அங்கீகாரம் இன்றைய சபை அமர்வில் எவ்வித எதிர்ப்புகளும் இன்றி
வழங்கப்பட்டது.

இதேவேளை, கடந்த மாகாண சபை அமர்வின் போது கொண்டுவரப்பட்ட இணைந்த வட கிழக்கு பிரேரணை தொடர்பில் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு தேசிய சுதந்திர முன்னணியின் மாகாண சபை உறுப்பினர் ஜயந்த விஜயசேகர இன்றைய தினம் கோரினார்.

எனினும், கட்சித் தலைவர்களின் தீர்மானத்திற்கு அமைய இதற்கான நேரத்தை ஒதுக்க முடியாது என சபைத் தவிசாளர் அறிவித்தார்.

இதனையடுத்து, தமக்கு பேசுவதற்கு சந்தர்ப்பம் மறுக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மேசை மீது ஏறி, தமக்கான சந்தர்ப்பத்தை வழங்குமாறு மாகாண சபை உறுப்பினர் கோரிக்கை விடுத்தார்.

சபையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து மாகாண சபையை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபை தவிசாளர் அறிவித்தார்.

10 நிமிடங்களுக்கு சபை கூடிய சந்தர்ப்பத்தில், மாகாண சபை உறுப்பினர் ஜயந்த விஜயசேகரவுக்கு 5 நிமிட கால அவகாசம் வழங்கப்பட்டது.

இதேவேளை, இன்றைய கிழக்கு மாகாண சபை அமர்வில் மாகாண சபை உறுப்பினர் உதுமா லெப்பையினால் மூன்று பிரேரணைகள் முன்வைக்கப்பட்டன.

கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மொழி பாடசாலைகளுக்கு சிங்கள மொழியில் தேர்ச்சிபெற்ற ஆசிரியர்கள் சிங்கள பாடத்திற்காக நியமிக்கப்பட வேண்டும், வட மாகாண முஸ்லிம்கள் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும், கிழக்கு மாகாணத்திலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பயிற்சி நிலையங்களை மூடுமாறு வழங்கப்பட்டுள்ள உத்தரவு இரத்து செய்யப்பட்டு பயிற்சி நிலையங்கள் மீள இயங்க வேண்டும் ஆகிய பிரேரணைகளை அவர் முன்வைத்திருந்தார்.

இதேவேளை, கிழக்கு மாகாண சபை அமர்வு இடம்பெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், தொண்டர் ஆசிரியர்களின் கவனயீர்ப்புப் போராட்டமொன்று மாகாண சபைக்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டது.

சுமார் 10 வருடங்களாக தொண்டர் ஆசிரியர்களாக பணிபுரிந்துவரும் தமக்கான நிரந்த நியமனங்களை வழங்குமாறு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்