சம்பூர் அனல் மின் நிலைய நிர்மாணத்திற்கு சுற்றாடல் அதிகார சபை அனுமதி

சம்பூர் அனல் மின் நிலைய நிர்மாணத்திற்கு சுற்றாடல் அதிகார சபை அனுமதி

சம்பூர் அனல் மின் நிலைய நிர்மாணத்திற்கு சுற்றாடல் அதிகார சபை அனுமதி

எழுத்தாளர் Bella Dalima

23 Feb, 2016 | 10:48 pm

சம்பூர் அனல் மின் நிலைய நிர்மாணத்திற்கான சுற்றாடல் அதிகார சபையின் அனுமதி கிடைத்துள்ளதாக மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதியமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்தார்.

திருகோணமலை, சம்பூர் பகுதியில் அனல் மின் உற்பத்தி நிலையம் அமைப்பது தொடர்பில் இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் 2011 ஆம் ஆண்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இந்தப் புதிய அனல் மின் நிலையத்தினூடாக 500 மெகா வாட் மின் உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

நிலக்கரியை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இந்த மின் நிலையத்தை அமைப்பதற்கு, இந்தியாவின் மிகப் பெரிய மின் உற்பத்தி நிறுவனமான தேசிய அனல் மின் நிலைய நிறுவனமும், இலங்கை மின்சார சபையும் உடன்பட்டன.

அதிகரித்து வரும் மின் தேவைகளை ஈடு செய்யும் வகையில், இந்த மின் நிலையத்தை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அனல் மின் நிலையத்தை அமைப்பதற்காக குறித்த பகுதியிலிருந்த சுமார் 1000 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் 2006ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டன.

இதனால், அரசாங்கத்திற்கு ஏற்பட்ட அழுத்தம் காரணமாக 2009 இல் சம்பூரிலுள்ள முகாம்களுக்கு இவர்கள் அனுப்பப்பட்டனர்.

கிளிவெட்டி, கட்டடைபறிச்சான், பட்டித்திடல், மணல்சேனை ஆகிய தற்காலிக முகாம்களில் இந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

அரசாங்கத்தால் இவர்களுக்கு வேறு இடங்கள் வழங்கப்பட்ட போதிலும், மீன்பிடி, விவசாயம் போன்ற தமது வாழ்வாதார தொழில்களை முன்னெடுக்க சொந்த இடங்களே அவசியமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், சம்பூர் பகுதியில் அரசாங்க தேவைக்கென சுவீகரிக்கப்பட்ட காணிகளை மீண்டும் பொதுமக்களுக்கு வழங்குமாறு உயர்நீதிமன்றம் கடந்த வருடம் ஜூலை மாதம் 11 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.

கையகப்படுத்தப்பட்ட காணியில் 818 ஏக்கர், ஓகஸ்ட் 22ஆம் திகதி உரியவர்களிடம் கையளிக்கப்பட்டது.

எனினும், அனல் மின் உற்பத்தி நிலையத்திற்கு செல்லும் வழி, தமது காணிகளூடாகவே காணப்படுவதாகவும், சிலரின் காணிகள் தொடர்ந்தும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்