ஆசிய அபிவிருத்தி வங்கித் தலைவர், ஜனாதிபதி சந்திப்பு: அதிக உதவிகளை வழங்க எதிர்பார்ப்பதாக தெரிவிப்பு

ஆசிய அபிவிருத்தி வங்கித் தலைவர், ஜனாதிபதி சந்திப்பு: அதிக உதவிகளை வழங்க எதிர்பார்ப்பதாக தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

23 Feb, 2016 | 7:53 pm

நாட்டிற்கு வருகை தந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் டகஹிகோ நகாஓ (Takehiko Nakao) இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இலங்கையின் அபிவிருத்திக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் கடந்த சில வருடங்களாக வழங்கப்பட்டுள்ள உதவிகளை விட, எதிர்வரும் வருடங்களில் அதிக உதவிகளை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையின் கல்வி மற்றும் நீர்ப்பாசனத் துறைகளை விருத்தி செய்வதற்கு விசேட உதவிகளை வழங்குவதற்கும் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியின் கீழ், இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் சில செயற்றிட்டங்கள் உரிய திட்டங்களின் அடிப்படையில் முறையாக முன்னெடுக்கப்படவில்லை என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசாங்கம் குறுகியகால மற்றும் நீண்டகால அடிப்படையில் நாட்டின் தேவைகளை அடையாளம் கண்டு, செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கிடைக்கும் உதவிகளை வெளிப்படைத் தன்மையுடனும் 100 வீதம் பயன்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும், அது தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் கவனம் செலுத்துவதற்கு தாம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதேவேளை, தேசிய சினிமாக் கலைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த சில கலைஞர்கள், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று சந்தித்தனர்.

சினிமாத்துறை தற்போது எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

திரைப்பட விநியோகத்தைத் தனியார்த்துறைக்கு வழங்காமல், கூட்டுத்தாபனத்தின் கீழ் கொண்டுவருமாறு கலைஞர்கள் இதன்போது கோரியுள்ளனர்.

கலைஞர்களைப் பாதுகாப்பதற்குத் தேவையான தீர்மானங்களை எடுப்பதற்கு அரசாங்கம் பின்வாங்கப் போவதில்லை என இதன்போது தெரிவித்த ஜனாதிபதி,​ அந்த யோசனையை எழுத்துமூலம் தமக்கு சமர்ப்பிக்குமாறும் அறிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்