அனகொண்டாவிடம் கடிபட்ட ஷேன் வார்ன்: தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது விபரீதம் (Video)

அனகொண்டாவிடம் கடிபட்ட ஷேன் வார்ன்: தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது விபரீதம் (Video)

எழுத்தாளர் Bella Dalima

18 Feb, 2016 | 4:24 pm

அவுஸ்திரேலிய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னை அனகொண்டா பாம்பு கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

”I am a celebrity get me out of here” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாம்புகள் அடங்கிய பெட்டி ஒன்று ஷேன் வார்னிடம் கொடுக்கப்பட்டது. அந்தப் பெட்டிக்குள் அவர் தலையை நுழைத்தார். உடனே அதனுள் இருந்த அனகொண்டா பாம்பு அவரது தலையில் கடித்தது.

விசமற்ற பாம்பு என்பதால் அவர் உயிர்தப்பினார். இருந்தாலும், பாம்பு கடித்த காயத்திற்காக சிகிச்சையளிக்கப்பட்டு கிருமிகள் உடலில் நுழையாதவாறு கண்காணிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே, நகம் வளர்ந்த ஆப்பிரிக்கத் தவளைகள், தேள்கள், சீறும் மடகாஸ்கர் ரக கரப்பான்பூச்சிகள் மற்றும் எலிகள் அடங்கிய பெட்டிக்குள் தலையை நுழைத்து தைரியம் காட்டிய ஷேன் வார்ன், அனகொண்டா பெட்டியில் தலைவிட்ட போது கடிபட்டார்.

அவர், எலிகள் பெட்டியில் தலையை நுழைத்ததால் அவரிடம் எலி வாடை இருந்துள்ளது. இதனால் அனகொண்டா அவர் மீது பாய்ந்தது என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்காக பயன்படுத்தப்பட்ட பாம்புகள் விசமற்றது என்ற போதிலும் சிறு அனகொண்டாவாக இருந்தாலும் கடித்தால் நூற்றுக்கணக்கான ஊசிகளால் குத்துவது போன்ற வலியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

ஷேன் வார்ன் தலையில் பாம்பு கடித்ததற்கான சில அடையாளங்கள் இருந்ததாகவும் ஆனால் தழும்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்