அமைச்சருடனான கலந்துரையாடலின் பின்னர் பாலத்துறை ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது

அமைச்சருடனான கலந்துரையாடலின் பின்னர் பாலத்துறை ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது

எழுத்தாளர் Bella Dalima

17 Feb, 2016 | 10:02 pm

கொழும்பு – பாலத்துறை, கஜீமா தோட்டத்தில் அகற்றப்பட்ட வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் வழங்கப்பட வேண்டுமா என்பது தொடர்பில் ஆய்வு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுடன் இன்று பகல் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக பிரச்சினையை எதிர்நோக்கியவர்கள் கூறினர்.

கொழும்பு – பாலத்துறையில் அமைந்துள்ள கஜீமா தோட்டத்திலுள்ள பல வீடுகளை அகற்றுவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை நேற்று (16) நடவடிக்கை எடுத்தது.

இதனால், வீடுகளை இழந்தவர்கள் கொழும்பு – நீர்கொழும்பு வீதியின் பாலத்துறை பாலத்திற்கு அருகில் வீதியை மறிந்து நேற்று மாலை எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பித்தனர்.

இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக கொழும்பு – நீர்கொழும்பு வீதி மாத்திரமன்றி கண்டி – கொழும்பு வீதி உள்ளிட்ட பல வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இன்று காலை வரை எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமையால், பாடசாலை மாணவர்கள் மற்றும் தொழிலுக்கு செல்வோர் என பலர் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

கொழும்பு வடக்கிற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹனவின் தலையீட்டினால் இன்று காலை 9 மணியளவில் மூடப்பட்டிருந்த கொழும்பு – நீர்கொழும்பு வீதி திறக்கப்பட்டது.

எதிர்ப்பில் ஈடுபட்டவர்களுள் சிலர் கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதேவேளை, இந்த பிரச்சினை தொடர்பில் தெளிவூட்டுவதற்காக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இதன்போது அமைச்சர் தெரிவித்ததாவது,

[quote]இந்த வீடுகளில் வாடகை அடிப்படையில் குடியிருந்தவர்களுக்கான விசேட திட்டமொன்றை நாம் முன்னெடுத்து, நியாயமான முறையில் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் வெளியேறுமாறு டிசம்பர் 19 ஆம் திகதி அறிவித்திருந்தோம். துரதிர்ஷ்டவசமாக அனைத்து வார இறுதி நாட்களிலும் நாம் சென்று அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளைக் கைப்பற்றி, சதுப்பு நிலங்களை நிரப்பி வீடுகளை நிர்மாணிக்கின்றோம். அதனால் இவற்றுக்கான இறுதித் தீர்வொன்றை எட்ட வேண்டி ஏற்பட்டது. கடந்த சனிக்கிழமை அதிகளவிலானோர் வருகை தந்து இந்த காணிகளில் குடியமர்வதற்கு முயற்சித்தனர். அதனாலேயே எமக்கு உடனடி தீர்வொன்றை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எவருக்கும் அநீதி இழைக்கப்படவில்லை. சிலர் தமது வீடுகளை வாடகைக்கு வழங்கி வேறு இடங்களுக்குச் சென்று குடியமர்ந்துள்ளனர். ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் அங்கு வந்து மீள குடியமரவில்லை எனின் அவற்றை அரசுடைமையாக்குவதாக நாம் அவர்களிடம் கூறியிருந்தோம். எவரும் வீடுகளற்றவர்கள் அல்ல என்பதை நாம் பொறுப்புடன் கூறுகின்றோம். இவ்வாறான செயற்பாடுகளின் ஊடாக எதனையும் பெற முடியாது.[/quote]

இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் வீடுகளை இழந்தவர்கள் மற்றும் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிற்கு இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலின் முடிவை எதிர்பார்த்து பாலத்துறை ஜப்பான் நட்புறவு பாலத்திற்கு அருகில் காத்திருந்த சிலர் இன்று பகல் 2 மணியளவில் மீண்டும் கொழும்பு – நீர்கொழும்பு வீதியை மறிப்பதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

அமைச்சருடனான கலந்துரையாடலின் முடிவுகளுடன் சிலர் வருகைதந்ததை அடுத்து எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து சென்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்