பலபிட்டிய நீதிமன்றம் முன்பாக துப்பாக்கிப் பிரயோகம்: கொலைச் சம்பவத்தின் சந்தேகநபர் சுட்டுக்கொலை

பலபிட்டிய நீதிமன்றம் முன்பாக துப்பாக்கிப் பிரயோகம்: கொலைச் சம்பவத்தின் சந்தேகநபர் சுட்டுக்கொலை

எழுத்தாளர் Bella Dalima

16 Feb, 2016 | 10:02 pm

பலபிட்டிய நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று முற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகத்திற்கு உள்ளானவர்கள் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் அவர்கள் நீதிமன்றத்திற்கு முன்பாக உள்ள வர்த்தக நிலையமொன்றுக்குச் சென்றுள்ளனர்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரிகள் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்தவர்கள் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மற்றைய நபர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 54 வயதான கே.ஏ. பியரத்ன என்பவரே உயிரிழந்துள்ளார்.

30 வயதான சமிந்த குமார என்பவர் சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.

இவர்கள் இருவருடனும் மீகெட்டுவத்தே சுமித்த தேரர் இன்று பலபிட்டிய நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.

2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி பென்தொட்ட பிரதேசத்தில் விடுதியொன்றின் ஊழியரை சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பிலான வழக்கில் ஆஜராகுவதற்காக இவர்கள் இன்று நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.

உயிரிழந்துள்ள கே.ஏ. பியரத்ன இந்த சம்பவத்தின் முதலாவது சந்தேக நபராவார்.

கொலைக்காக ஆயுதம் வழங்கியமை மற்றும் கொலையாளிகள் தங்குவதற்கு இடம் வழங்கியமை தொடர்பில் தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தின் பின்னர் குறித்த தேரர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து பொலிஸ் பாதுகாப்புடன் வெளியே சென்றதாக எமது செய்தியாளர் கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்