நாய் வேலை செய்வதற்கு இடமளிக்கமாட்டேன்: பிரதமர் சில ஊடகங்களுக்கு சூளுரை

நாய் வேலை செய்வதற்கு இடமளிக்கமாட்டேன்: பிரதமர் சில ஊடகங்களுக்கு சூளுரை

எழுத்தாளர் Bella Dalima

13 Feb, 2016 | 9:08 pm

அரசாங்கத்தின் மக்கள் நேய முயற்சிகளுக்கு அரசியல் குழு ஒன்று இடையூறு விளைவிப்பதாக இன்று பதுளையில் விசேட உரை நிகழ்த்திய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஊவா மாகாண ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

தாம் வாக்களித்த அரசியல் கட்சி தமக்காக முன்னிற்கும் என பெண்கள் எதிர்பார்த்திருக்கையில், கூட்டமைப்பின் ராஜபக்ஸ குழுவானது பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்காது அதற்குத் தடைகளை விளைவித்ததாக இதன்போது பிரதமர் சுட்டிக்காட்டினார்.

மேலும், பெண்களை அவதூறு செய்யும் சில ஊடகங்களின் செயற்பாடுகளையும் பிரதமர் கண்டித்தார்.

அதுபற்றி பிரதமர் தெரிவித்ததாவது,

[quote]சுதந்திர தினத்தில் ”தன்னோ புதுன்கெ” என்ற பாடல் பாடப்பட்டதாகவும் அந்தப் பாடகி பெண் நாயைப் போன்று சத்தமிட்டதாகவும் தெரண செய்தியில் தெரிவிக்கப்பட்டது. பாராட்டுக்களைத் தெரிவிக்கலாம், விமர்சனங்களையும் முன்வைக்கலாம், அதற்கு உரிமை உள்ளது. பெண் ஒருவரை பெண் நாய் என தொலைக்காட்சியில் கூற முடியுமா? ராஜபக்ஸ ஆட்சியில் எவரை வேண்டுமானாலும் திட்டலாம். ஊடகம் வாயிலாக எம் அனைவரையும் திட்டினர். அதற்குப் பழக்கப்பட்டவர்கள் இன்றும் உள்ளனர். தொலைக்காட்சிகள் அதன் உரிமையாளர்களுக்கு
மாத்திரம் உரியவை அல்ல. மக்களுக்காகவே அரசாங்கம் அனுமதிப் பத்திரம் வழங்குகின்றது. நாட்டில் பெண்களே அதிகம் உள்ளனர். அவ்வாறு எனில், அவர்களை நாய் என திட்டும் நிலைக்கு செல்லமுடியுமா? அரசாங்கத்தின் ஒளிபரப்பு அனுமதிப் பத்திரங்களைக் கொண்டு நாய்கள், நாய் வேலை செய்வதற்கு இடமளிக்கமாட்டேன். [/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்