குடைசாய்ந்த லொறி மீது வேனும் வேன் மீது கெப் வாகனமும் மோதி விபத்து: ஒருவர் பலி

குடைசாய்ந்த லொறி மீது வேனும் வேன் மீது கெப் வாகனமும் மோதி விபத்து: ஒருவர் பலி

குடைசாய்ந்த லொறி மீது வேனும் வேன் மீது கெப் வாகனமும் மோதி விபத்து: ஒருவர் பலி

எழுத்தாளர் Bella Dalima

13 Feb, 2016 | 10:03 pm

அநுராதபுரம் – கருவெலகஸ்வெவ பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த மேலும் 6 பேர் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்திற்குள்ளான லொறி ஒன்றில் வேன் ஒன்றும் அதனை அடுத்து கெப் வாகனமொன்றும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

வவுனியாவில் இருந்து கொழும்புக்கு அரிசி ஏற்றி வந்த லொறி ஒன்று வீதியில் குறுக்காக வந்த காட்டு யானையுடன் மோதி குடைசாய்ந்துள்ளது.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வருகை தந்த கருவெலகஸ்வெவ பொலிஸார் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், வேகமாக வந்த வேன் லொறியில் மோதியுள்ளது.

இந்த வேன் வவுனியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, குறித்த வேனுக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த சிறியரக கெப் வாகனம் வேனுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதன்போது, சம்பவ இடத்தில் நின்ற இரு பொலிஸாரும் லொறியின் சாரதியும் வீதியோரமாய்ப் பாய்ந்து உயிர் தப்பியுள்ளனர்.

லொறியில் மோதிய வேனில் இருந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, காலி – யக்கலமுல்லை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பஸ்சுடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த வருடத்தின் ஜனவரியிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 191 பேர் உயிரிழந்துள்ளதாக வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்