மேற்கிந்தியத்தீவுகள் டி20 உலகக்கிண்ணத்தில் பங்கேற்பதில் சந்தேகம்

மேற்கிந்தியத்தீவுகள் டி20 உலகக்கிண்ணத்தில் பங்கேற்பதில் சந்தேகம்

மேற்கிந்தியத்தீவுகள் டி20 உலகக்கிண்ணத்தில் பங்கேற்பதில் சந்தேகம்

எழுத்தாளர் Staff Writer

11 Feb, 2016 | 11:21 am

சம்பள ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து மேற்கிந்திய கிரிக்கெட் சபைக்கு எதிராக அதன் வீரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால் 20 ஓவர் உலகக்கிண்ண போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

அடுத்த மாதம் இந்தியாவில் நடக்கும் 20 ஓவர் உலகக்கிண்ண போட்டிக்கான மேற்கிந்தியத்தீவுகள் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. டரன் சமி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்த அணியில் கிறிஸ் கெய்ல், பொலார்ட், டுவெய்ன் பிராவோ, சுனில் நரைன், சாமுவேல்ஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் மேற்கிந்திய தீவு அணி வீரர்கள், மேற்கிந்திய தீவு கிரிக்கெட் சபைக்கு எதிராக திடீரென போராட்டத்தில் குதித்துள்ளனர்.

உலகக்கிண்ண போட்டிக்கு என்று மேற்கிந்திய கிரிக்கெட் சபை வீரர்களுக்கு தனியாக ஊதிய ஒப்பந்தம் செய்வது உண்டு. இந்த வகையில் தற்போதைய உலக கிண்ணத்திற்கு ஒப்பந்தத்தை ஏற்க மேற்கிந்திய வீரர்கள் மறுத்துள்ளனர். இது தொடர்பாக வீரர்கள் சார்பில் அணியின் தலைவர் டரன் சமி, மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை தலைமை அதிகாரி முயர்ஹெட்டிற்கு இரண்டு கடிதங்கள் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் ‘மேற்கிந்திய தீவுகள் சார்பில் உலகக்கிண்ண போட்டியில் கலந்து கொள்ள விரும்புகிறோம். அதே நேரத்தில் தற்போது வகுக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த உலக கிண்ணத்தில், ஒவ்வொரு ஆட்டத்திற்கான கட்டணமாக வீரர்களுக்கு 21,000 அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ளீர்கள். இது ஏற்கத்தக்கது அல்ல. 2012 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்துடன் ஒப்பிடும் போது 50 முதல் 80 சதவீத ஊதியம் எங்களுக்கு குறைகிறது.

எனவே 21,000 அமெரிக்க டொலர்கள் என்பதை இரண்டு மடங்காக உயர்த்தி தர வேண்டும். போட்டியில் கிடைக்கும் பரிசுத்தொகை அனைத்தையும் முந்தைய உலகக்கிண்ணத்தை போன்றே வீரர்களுக்கே கொடுத்து விட வேண்டும். அதில் 20 சதவீதத்தினை பெறும் முடிவை கைவிட வேண்டும்’ என்று வலியுறுத்தி இருக்கிறார்.

ஆனால் வீரர்களின் கோரிக்கையை ஏற்க மேற்கிந்திய கிரிக்கெட் சபை தயாராக இல்லை. வருகின்ற 14 ஆம் திகதிக்குள் ஒப்பந்தத்தை ஏற்று கையெழுத்திடாவிட்டால், அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை தேர்வு செய்வதை தவிர எங்களுக்கு வேறுவழியில்லை என்று முயர்ஹெட் எச்சரித்துள்ளார்.

சம்பளத்தை உயர்த்தி கொடுக்கும் நிலையில் மேற்கிந்திய கிரிக்கெட் சபை இல்லை என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்