அரசியலமைப்புத் திருத்தம்: மன்னாரில் இரண்டாவது நாளாக ஆலோசனைகள் பதிவு

அரசியலமைப்புத் திருத்தம்: மன்னாரில் இரண்டாவது நாளாக ஆலோசனைகள் பதிவு

அரசியலமைப்புத் திருத்தம்: மன்னாரில் இரண்டாவது நாளாக ஆலோசனைகள் பதிவு

எழுத்தாளர் Bella Dalima

11 Feb, 2016 | 9:52 pm

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துக்களைக் கேட்டறியும் குழு இன்று இரண்டாவது நாளாக மன்னாரில் கூடியது.

மன்னார் மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் கூடிய, அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை கேட்டறியும் குழுவினர், இன்றும் மக்களின் கருத்துக்களையும் யோசனைகளையும் பதிவு செய்தனர்.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் சார்பில் 10 பேர் கொண்ட குழு அரசியலமைப்புத் திருத்தத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய தமது யோசனைகளை முன்வைத்திருந்தது.

இன்றைய அமர்வில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்றனி விக்டர் சோசை அடிகளாரும் தமது அரசியலமைப்பு தொடர்பிலான ஆலோசனைகளைத் தெரிவித்திருந்தார்.

இதனைத் தவிர மேலும் பல மதத்தலைவர்களும், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் தமது ஆலோசனைகளை சமர்ப்பித்திருந்தனர்.

பாரம்பரிய மற்றும் கலாசார விழுமியங்களைப் பாதுகாத்து அனைத்து இன மக்களுக்கும் சம அந்தஸ்த்தை வழங்க வேண்டும் என இதன்​போது அநேகமானவர்கள் குறிப்பிட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.

இன்று மாலை வரை 101 பேரது கருத்துக்களையும் யோசனைகளையும் அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் கருத்துக்களை கேட்டறியும் குழு பெற்றுக்கொண்டுள்ளது.

இதுவரை 11 மாவட்டங்களில் மக்களின் யோசனைகள் திரட்டப்பட்டுள்ளதுடன், அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கான சுமார் 1500 யோசனைகள் இதுவரை இந்தக் குழுவிற்கு கிடைத்துள்ளன.

இதேவேளை, அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கான மக்களின் யோசனைகளை நாடு முழுவதும் பதிவுசெய்யும் நடவடிக்கைகளை இம்மாத இறுதிக்குள் நிறைவுசெய்ய எண்ணியுள்ளதாகவும் அந்தக் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

அதன் பின்னர், ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சிவில் அமைப்புகள், மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய தரப்பினர்களிடமும், புலம்பெயர் மக்களிடமும் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கான யோசனைகளைப் பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்தவர்களிடம் யோசனைகளை பதிவுசெய்வதற்காக தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கான மக்களின் யோசனைகளை கேட்டறியும் குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்