நீரைக் குடிப்பதா, வேண்டாமா: தெளிவான பதிலைக் கோருகின்றனர் சுன்னாகம் மக்கள்

நீரைக் குடிப்பதா, வேண்டாமா: தெளிவான பதிலைக் கோருகின்றனர் சுன்னாகம் மக்கள்

எழுத்தாளர் Bella Dalima

30 Jan, 2016 | 10:20 pm

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதில் தொடர்ந்தும் தாமதம் நிலவுவதாக மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

சுன்னாகம் பகுதியில் கிணற்று நீரில் கழிவு எண்ணெய் கலந்துள்ளதாக தகவல் வெளியாகி ஒரு வருடத்திற்கும் மேற்பட்ட காலம் கடந்துள்ள நிலையில், இன்றும் மக்கள் மத்தியில் நிலவும் அந்த குழப்ப நிலை தணியவில்லை.

யாழ். சுன்னாகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலுள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துள்ளதாக 2014 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் ஆய்வுகளை நடத்தி அறிக்கைகளை சமர்ப்பித்திருந்ததுடன், முதற்கட்ட ஆய்வறிக்கை 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி வெளியானது.

சுன்னாகத்தில் நிலத்தடி நீரில் பார உலோகங்கள் கண்டறியப்படவில்லை எனவும் கிணற்று நீரின் மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்படவேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணத்தில் நீரில் கழிவு எண்ணெய் கலக்கவில்லை என நிபுணர் குழுவின் அறிக்கை தெரிவிப்பதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வடமாகாண சபையில் அறிவித்தார்.

அத்தோடு, அமைச்சர் பொ.ஐங்கரநேசனால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வெளியானது.

சுன்னாகம் பகுதியில் கிணற்று நீர் பெற்றோலியப் பொருட்களாலோ அல்லது பார உலோகங்களாலோ மாசடைந்துள்ளதற்கான சான்றுகள் இல்லை என ஆய்வுகளின் முடிவுகள் காட்டுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், சுன்னாகம் நிலத்தடி நீரின் ஓட்டம், வேறுபட்ட தன்மைகள், பரப்பளவு என்பவற்றைக் கருத்திற்கொள்ளும்போது இந்த ஆய்வு சுன்னாகம் முழு நிலத்தடி நீரிற்கும் பொருந்தும் என்பதை திட்டவட்டமாகக் கூற முடியாது எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில், யாழ் சுன்னாகம் பகுதியில் குடிநீர் மாசடையவில்லை என தெரிவி்த்து வெளியிடப்பட்ட அறிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என நகர திட்டமில் மற்றும் நீர் விநியோக வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் கடந்த 27 ஆம் திகதி கூறினார்.

அவ்வப்போது வெளியாகும் மாறுபட்ட கருத்துக்கள் காரணமாக தமது சந்தேகத்திற்கு இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை என சுன்னாகம் பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.

மத்திய அரசாங்கமும் வடமாகாண சபையும் இணைந்து சுயாதீன விசாரணைக் குழுவொன்றை நியமித்து இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்