பிரதமர் ரணில் விக்ரமசிங்க சேனல் 4 அலைவரிசைக்கு வழங்கிய நேர்காணல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சேனல் 4 அலைவரிசைக்கு வழங்கிய நேர்காணல்

எழுத்தாளர் Bella Dalima

28 Jan, 2016 | 9:42 pm

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சேனல் 4 அலைவரிசைக்கு பிரத்தியேக நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.

நேர்காணல் பின்வருமாறு…

கேள்வி: பிரதமர் அவர்களே, யுத்தம் நிறைவடைந்து 6 வருடங்களாகின்றன. இன்னமும் எவ்வித விசாரணையும் இல்லை.

பிரதமர்: பொறுப்புகூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கான பொறிமுறையை ஒரே தடவையில் செயற்படுத்துவதே எமது எதிர்பார்ப்பாகும். மே மாதத்தில் அல்லது ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவைக் கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னதாக நாம் எமது தீர்மானத்தைத் தயார் படுத்திக்கொள்வோம்.

கேள்வி: சர்வதேசத் தலையீடு அவசியம் என சர்வதேச சமூகம், அதேபோன்று நான் நினைப்பது போல், தமிழ் மக்களும் எதிர்பார்க்கின்றார்கள். இந்த விசாரணைகளில் சர்வதேச தலையீட்டிற்கு இடமில்லை என கடந்த வாரம் ஜனாதிபதி கூறியிருந்தார்.

பிரதமர்: இல்லை. அவர் அதனை நிராகரிக்கவில்லை. நாம் எதனை செய்தாலும் அது மக்களுக்கு நன்மைபயக்க வேண்டும் என்பதே முதல் நோக்கமாகும். நாம் இதற்காக நீண்டகால செயற்றிட்டமொன்றை ஆரம்பித்துள்ளோம்.

கேள்வி: சர்வதேசமும் அதில் உள்ளதா?

பிரதமர்: ஆம். ஜெனீவா தீர்மானத்தில் நாம் வாக்குறுதியளித்தவற்றை நிறைவேற்றுவதற்காக நாம் முன்னிற்கின்றோம்.

கேள்வி: இறுதியில் நம்பிக்கையே முக்கியமாகின்றது அல்லவா? நம்பிக்கை அற்றுப்போனால்?

பிரதமர்: நாம் ஒன்றாகவே செயற்படுகின்றோம். ஜோன் அவர்களே, எவரும் எந்தவொரு விடயத்திற்காகவும் கவலையடைய வேண்டிய தேவை இருக்கும் என நான் நினைக்கவில்லை. நாம் அனைவரும் மனிதர்கள். நாம் அனைவரும் அதற்காகப் போராடியவர்கள். வேறு எவரும் செய்யாதவாறு நான் இதற்காக என் கழுத்தை வைத்துள்ளேன்.

கேள்வி: இது தொடர்பில் எனது பாராட்டும் இருக்கின்றது.

பிரதமர்: நாம் மே மாதமளவில் நடவடிக்கை எடுப்போம். மே மாதமளவில் இந்த அனைத்து சந்தேகங்களும் தணியும்.

கேள்வி: ஏன் ஐக்கிய நாடுகள் குறைத்து மதிப்பிடப்பட்டது என்ற விடயம் குறித்து உண்மையைக் கண்டறிவதற்கான மிகுந்த தேவைப்பாடு உள்ளது. எமது சரியான சாட்சியங்களுக்கு அமைய சுமார் 40 ஆயிரம் பொதுமக்கள் கொலைக்களத்தில் உயிரிழந்துள்ளனர்.

பிரதமர்: உண்மையிலேயே ஜோன் அவர்களே, பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கொலை செய்யப்பட்டனர். எனினும் எண்ணிக்கை தொடர்பில் எமக்கு பிரச்சினை உள்ளது. அது 20 ஆயிரம் அல்லது 40 ஆயிரமாக இருக்கலாம். எனினும், அது 20 ஆயிரமா அல்லது 40 ஆயிரமா என்பதில் கேள்வி எழுகின்றது. உண்மையான எண்ணிக்கையைக் கண்டறிவதில் எமக்கும் விருப்பம் உள்ளது.

கேள்வி: காணாமற்போனவர்களை மீண்டும் கண்டுபிடிக்க முடியாது என்பது தொடர்பில் அண்மைக்காலமாக அதிகம் பேசப்பட்டது. நீங்கள் கூறியது சரியானது. காணாமற்போனவர்கள் என்று எவரும் இல்லை. அவர்கள் உயிரிழந்துவிட்டார்கள் என்பதைக் கூறுவதற்கு ஆறு வருடங்கள் சென்றுள்ளது. எனினும் அது உண்மையா? தடுப்பு முகாம்களில் எவரும் இல்லை என்றா நீங்கள் கூறுகின்றீர்கள்?

பிரதமர்: அத்தகைய தடுப்பு முகாம்கள் வடக்கிலோ தெற்கிலோ இல்லை.

கேள்வி: உங்களுக்கு அதில் நம்பிக்கை உள்ளதா?

பிரதமர்: எனக்கு நம்பிக்கை உள்ளது

கேள்வி: ஒன்றுகூட இல்லை என்பதை உறுதியாகக் கூற முடியுமா?

பிரதமர்: எனக்கு நம்பிக்கை உள்ளது.

கேள்வி: அரசாங்கம் அறிந்த வரையில் நடத்திச் செல்லப்படுகின்ற எத்தகைய தடுப்பு முகாம்களும் இல்லையா?

பிரதமர்: 292 தடுப்பு முகாம்கள் தொடர்பில் அரசாங்கம் அறிந்திருக்கின்றது.

கேள்வி: அவ்வளவுதானா?

பிரதமர்: அவ்வளவே தான்.

கேள்வி: வேறு ஒன்றும் இல்லையா?

பிரதமர்: ஒன்றுகூட இல்லை

கேள்வி: ராஜபக்ஸ குடும்பத்தார் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி, அதேபோன்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படுகிறது. அந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படுமா?

பிரதமர்: இலங்கையில் எவருக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்ய முடியும். அதிகாரம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டால் அது குற்றமாகும். எனினும், அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு அல்லது விசாரணை ஆணைக்குழு ஊடாக விசாரணை மேற்கொள்வதற்கான வாய்ப்பு மாத்திரம் காணப்படுகின்றமை துரதிர்ஷ்டவசமானது. எனினும், இலங்கையின் சட்டத்திற்கு அமைய எவருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்ய முடியும்.

கேள்வி: ராஜபக்ஸ குடும்பத்தாருக்குமா?

பிரதமர்: அவர்களும் உள்ளடங்கலாக.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்