சுன்னாகம் நீர் மாசு: யாரை நம்புவதென அறியாத நிலையில் மக்கள்!

சுன்னாகம் நீர் மாசு: யாரை நம்புவதென அறியாத நிலையில் மக்கள்!

எழுத்தாளர் Bella Dalima

28 Jan, 2016 | 10:21 pm

யாழ். சுன்னாகம் பகுதியில் குடிநீர் மாசடையவில்லை என தெரிவி்த்து வெளியிடப்பட்ட அறிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று (27) தெரிவித்திருந்தார்.

அமைச்சரின் இந்தக் கருத்தையடுத்து சுன்னாகம் பகுதியிலுள்ள குடிநீரைப் பருக முடியுமா, இல்லையா என்பதில் மீண்டும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.

யாழ். சுன்னாகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலுள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்துள்ளதாக 2014 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் தகவல்கள் வெளியாகின.

நீர் மாசடைந்தமைக்கு சுன்னாகம் பகுதியிலுள்ள மின் உற்பத்தி நிலையமொன்றிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு எண்ணெய் காரணம் என மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததுடன் இந்தப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வை வழங்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தி கடந்த வருட ஆரம்பத்தில் பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.

இந்த நிலையில் சுன்னாகம் பகுதியிலுள்ள மின் நிலையத்தின் செயற்பாடுகளை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துமாறு 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் திகதி மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மக்களின் போராட்டங்கள் வலுப்பெற்று வந்த நிலையில், 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் திகதி வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது
தூய குடிநீருக்கான விசேட செயலணி ஸ்தாபிக்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்தினை பராமரிப்புப் பணிகளுக்காகத் திறப்பதற்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை யாழ். மேல் நீதிமன்றம் வழங்கியது.

இந்த நிலையில், சுன்னாகம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலுள்ள கிணறுகள் கழிவு எண்ணெய் மற்றும் கிறீஸ் கலந்திருந்துள்ளதாகத் தெரிவித்த மக்கள், அந்த நீரைப் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தாம் தள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினர்.

நீரில் எண்ணெய் மற்றும் கிறீஸ் கலந்துள்ளமையினால், நீரைச் சூடாக்குவதாலோ அல்லது வடிகட்டுவதாலோ நீரிலுள்ள எண்ணெய் மற்றும் கிறீஸ் ஆகியவற்றை அகற்ற முடியாது என சுகாதாரத் தரப்பினர் அறிவித்தனர்.

சுன்னாகம் நிலத்தடி நீர் தொடர்பான முதற்கட்ட ஆய்வறிக்கை 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி வெளியானது.

சுன்னாகத்தில் நிலத்தடி நீரில் பார உலோகங்கள் கண்டறியப்படவில்லை எனவும் கிணற்று நீரின் மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சுன்னாகம் குடிநீ்ர் பிரச்சினை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கவனம் செலுத்தியிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் நீரில் கழிவு எண்ணெய் கலக்கவில்லை என நிபுணர் குழுவின் அறிக்கை தெரிவிப்பதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி வடமாகாண சபையில் அறிவித்தார்.

எனினும், தனியார் நிறுவனமொன்று தன்னிச்சையாக இந்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தன் குற்றம் சுமத்தினார்.

2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி பாராளுமன்றத்திலும் சுன்னாகம் நீர் பிரச்சினை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது

சுன்னாகம் பகுதியிலுள்ள நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்துள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை கடந்த வருடம் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

எனினும், அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்த விடயங்கள் தமக்குப் புரியவில்லை என மக்கள் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தனர்.

இந்த நிலையிலேயே நகரத் திட்டமிடல் மற்றும் நீர் விநியோக வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம், சுன்னாகம் பகுதியில் குடிநீர் மாசடையவில்லை என தெரிவித்து வெளியிடப்பட்ட அறிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சு ஒரு நிலைப்பாட்டினையும், வடமாகாண சபை நியமித்த நிபுணர் குழு வேறொரு நிலைப்பாட்டையும், வெளியிட்டுள்ள நிலையில் செய்வதறியாது சுன்னாகம் மக்கள் இன்றும் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்