காணாமற்போனோரின் உறவுகளும் 6 நிறுவனங்களும் கலந்துரையாடல்

காணாமற்போனோரின் உறவுகளும் 6 நிறுவனங்களும் கலந்துரையாடல்

எழுத்தாளர் Bella Dalima

28 Jan, 2016 | 5:28 pm

காணாமற்போன உறவுகளைத் தேடும் குடும்பங்களின் சங்கமும் அதனுடன் இணைந்து செயற்படும் 6 நிறுவனங்களும் கிளிநொச்சியில் இன்று முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டன.

இந்த கலந்துரையாடல் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இன்று முற்பகல் 9 மணியளவில் ஆரம்பமானது.

காணாமற்போனவர்களைத் தேடும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த காணாமற்போனோரைத் தேடும் உறவினர்கள் இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், இதன்போது நான்கு முக்கிய விடயங்கள் தொடர்பில் தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.

காணாமற்போனவர்களுக்கு மரண அத்தாட்சிப் பத்திரம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரான சுகாதார அமைச்சர் அண்மையில் தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவிப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் கால எல்லையை நீடிக்கத் தேவையில்லை என்றும், புதிதாக ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படவேண்டும் எனவும் காணாமற்போனோரைத் தேடும் உறவுகள் இன்று வலியுறுத்தியுள்ளனர்.

அவ்வாறு புதிதாக நியமிக்கப்படும் ஆணைக்குழுவானது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து செயற்படுவதானால், செஞ்சிலுவை சங்கத்தின் வாக்குமூலங்களைப் பகிரங்கப்படுத்தலாகாது என்ற கொள்கையை கடைப்பிடிக்கக்கூடாது என்றும் காணாமற்போனோரது உறவுகளும், அதனுடன் இணைந்து செயற்படும் ஆறு அமைப்புகளும் இன்று தீர்மானித்துள்ளன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்