பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த  தமிழ் கைதிகள் மூவர் விடுதலை

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த  தமிழ் கைதிகள் மூவர் விடுதலை

எழுத்தாளர் Bella Dalima

27 Jan, 2016 | 5:19 pm

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த தமிழ் கைதிகளில் மூவர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த 21பேரும், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் ஏற்கனவே பிணை வழங்கப்பட்டிருந்த 39 பேரும் கொழும்பு மேலதிக நீதவான் அருனி ஆட்டிகல முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

இதன்போது இந்த கைதிகள் தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அறிக்கையை பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

இதனையடுத்து, பிணை வழங்கப்பட்டிருந்தவர்களில் மூன்று பேரை வழக்கிலிருந்து விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே பிணை வழங்கப்பட்டிருந்தவர்களில் 14 பேரை சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் ஆலோசனையின் பிரகாரம் ஒருவருட புனர்வாழ்விற்கு உற்படுத்துமாறும் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.

புனர்வாழ்வு பெறுவது குறித்த தமது விருப்பத்தைத் தெரிவிப்பதற்கு நீதிமன்றத்தினால் இரண்டு வார காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகளில் மற்றுமொருவருக்கு திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யுமாறும் கொழும்பு மேலதிக நீதவான் அருனி ஆட்டிகல பயங்கரவாத தடுப்புப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.

21 தமிழ் கைதிகளையும் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழ்க் கைதிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்