‘அரண்மனை 2’ படத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தாக்கல்

‘அரண்மனை 2’ படத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தாக்கல்

‘அரண்மனை 2’ படத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தாக்கல்

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2016 | 10:50 am

நடிகர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவான ‘அரண்மனை 2’ படத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை மாநகர சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ரஜினி நடித்த ‘ஆயிரம் ஜென்மங்கள்’ உள்ளிட்ட பல்வேறு படங்களை எடுத்தவர் சினிமா தயாரிப்பாளர் முத்துராமன். இவர், சென்னை மாநகர சிவில் நீதிமன்றத்தில் சில மாதங்களுக்கு முன்பு தாக்கல் செய்த மனுவில், ‘‘நான் தயாரித்த ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் கதையை அப்படியே அச்சு பிசகாமல் காப்பியடித்து ‘அரண்மனை’ என்ற பெயரில் இயக்குநர் சுந்தர்.சி படம் எடுத்தார். என்னுடைய படத்தின் கதை என்பதால் அதை வெளியிட தடை விதிக்க வேண்டும்’’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கு பல மாதங்களாக நிலுவையில் இருந்து வருகிறது. இதற்கிடையே, ‘அரண்மனை’ படம் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் தயாரிப்பாளர் முத்துராமன், சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

‘அரண்மனை-2’ என்ற பெயரில் ஒரு படத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். விரைவில் அப்படம் திரையிடப்பட உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சித்தார்த், நடிகைகள் ஹன்சிகா, த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். என்னுடைய ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் கதை அடிப்படையில்தான் இந்தப் படமும் உருவாகியுள்ளது. என் அனுமதியின்றி இந்தப் படத்தையும் சுந்தர்.சி இயக்கியுள்ளார். எனவே. ‘அரண்மனை-2’ படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதி டேனியல் அரிபாபு முன்பு விசாரணைக்கு வந்தது, மனுவை விசாரித்த நீதிபதி, ‘‘இதுதொடர்பாக மனுதாரரும், எதிர் மனுதாரரும் சமரச தீர்வு மையத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி வரும் 28 ஆம் திகதி முடிவு செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை 28 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்