அச்சுவேலியில் நில வெடிப்பு ஏற்பட்ட பகுதிக்கு மக்கள் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவிப்பு

அச்சுவேலியில் நில வெடிப்பு ஏற்பட்ட பகுதிக்கு மக்கள் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

27 Jan, 2016 | 9:17 pm

யாழ்ப்பாணம், அச்சுவேலி, நவகிரியில் நிலத்தில் வெடிப்பு ஏற்பட்ட பிரதேசம் இடர் ஏற்பட்ட பகுதி  என்பதனால் மக்கள் அங்கு செல்வதைத் தவிர்க்குமாறு யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை, தேசிய கட்டட ஆய்வு நிலையம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தலைமையிலான குழுவினர் வெடிப்பு ஏற்பட்ட பகுதியில் இன்று ஆய்வுகளை மேற்கொண்டனர்.

அச்சுவேலி, நவகிரி பகுதியில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் பாரிய சத்தத்துடன்
திடீரென நிலத்தில் வெடிப்பு ஏற்பட்டது.

சுமார் 300 மீற்றர் நீளத்திற்கு நிலத்தில் வெடிப்பு ஏற்பட்டதுடன், நவகிரிப் பகுதியிலுள்ள வீடொன்றின் சுவர்களிலும் இதன்போது வெடிப்பு ஏற்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தை அடுத்து புவிச் சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியக அதிகாரிகளும், இடர் முகாமைத்துவ அதிகாரிகளும் நவகிரி பகுதியில் ஆய்வுகளை ஆரம்பித்தனர்.

இந்த ஆய்வுகளைத் தொடர்ந்து யாழ். குடாநாட்டின் நிலத்தின் தன்மையைப் பொருத்தவரையில், இத்தகைய வெடிப்புக்கள் ஏற்படுவது சாதாரணமான விடயம் என புவிச்சரிதவியல் நிபுணர்கள் கூறினர்.

அதனால் திடீரென நிலத்தில் ஏற்பட்ட வெடிப்பு தொடர்பில் மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

யாழ். குடாநாட்டின் நிலத்தின் தன்மையைப் பொருத்தவரையில், இத்தகைய வெடிப்புக்கள் ஏற்படுவது சாதாரணமான விடயம் என யாழ். பல்கலைக்கழகத்தின் புவிச்சரிதவியல் துறையின் பேராசிரியர் எஸ்.ரி.பீ. இராஜேஸ்வரன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்.

இதேவேளை, அச்சுவேலி நவகிரிப் பகுதியில் ஏற்பட்ட நில வெடிப்பு தற்போது விரிவடைந்துள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, நில வெடிப்பு ஏற்பட்ட பகுதிக்கு மக்கள் செல்வதைத் தவிர்க்கும் வகையில் யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரால் அறிவுறுத்தல் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, தேசிய கட்டட ஆய்வு நிலையம் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் தலைமையிலான குழுவினர் அச்சுவேலி நவகிரிப் பகுதியில் இன்று ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்